பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 61


 அவற்றைப் படித்த அறிஞர் பலரும் கேரள புத்திர ரென்றே படித்து வந்திருக்கின்றனர். பிற்கால வடநூற் பயிற்சியால் அசோகன் கல்வெட்டுகளைப் படித்தோர் கேரள புத்திரர் என்று கருதிவிட்டிருக்கலாம். இடைக் காலச் சோழவேந்தர் கல்வெட்டுகள்[1] சேர வேந்தர்களைக் கேரளர் என்று கூறுவதைப் படித்த பயிற்சியால் அசோகன் கல்வெட்டுகளைக் கேளர புத்திரரென அவர்கள் மாறிப் படித்தற்கு இடமுண்டாயிற்றெனவும் கருதலாம். இடைக்காலக் கல்வெட்டுகளை நோக்குமிடத்துக் கேரளர் என்ற வழக்குக் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருப்பது தெரிகிறது[2]. ஆனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான திருஞான சம்பந்தர் முதலியோர் திருப்பதிகங்களுள் சேரர், சேரலர் என்ற பெயர்கள் காணப்படுகின்றனவேயன்றிக் கேரளர் என்ற சொல்வழக்குக் காணப்படவில்லை. இதனை நினையுங்கால் கேரளர் என்ற வழக்காறு சோழ பாண்டிய நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் உண்டாயிற்றென்பது விளங்குகிறது.

சேரலர் என்பது கேரளர் என மாறி வழங்கும் முறை வடநாட்டில் நெடுங்காலத்துக்கு முன்பே தோன்றி விட்டது. அசோகன் கல்வெட்டில் காணப்படுவது கேரளர் என்பதேயாயின் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே வடவர் சேரலர் என்னும் தமிழ்ச் சொல்லைக் கேரளர் எனத் திரித்துக் கொண்டனர் என்று அறியலாம்.


  1. Inscriptions of Sri. Vira Rajendra (Rajakersari Varman) S.I.I. Vol. ii. No. 20;
  2. Velvikudi grant, Ep. Indi. Vol. xvii. No. 16