பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 சேர மன்னர் வரலாறு



குடமலை நாடென்றும் வழங்கிய காலம்; அந் நாட்டில் செந்தமிழ் மொழி சிதையாது நிலவிய காலம். இடைக்காலத்தில் சேரநாட்டுப் பகுதிகளில் தோன்றிய தமிழ்க்கல்வெட்டுகளை நோக்கின், அப் பகுதியிலுள்ள மக்களும் ஊர்களும் தூய செந்தமிழ்ப் பெயர் தாங்கி யிருப்பதைக் காணலாம். பரோலா என்னுமிடத்துக் கல்வெட்டு[1] அவ்வூரைப் புலவேர் வாயில் எனவும், திருவன்னூரிலுள்ள கல்வெட்டு[2] அவ்வூரைத் திரு முன்னூரெனவும், இருஞாலக்குடாவிலுள்ள கல்வெட்டு[3] அதனை இருஞாலக்கூடல் எனவும், கடலுண்டி என்னுமிடத்துக் கல்வெட்டு[4] அவ்வூரைத் திருமண்ணு ரெனவும் வழங்குவது போதிய சான்றாகும். மேலைக் கடற்கரை நாட்டு வட கன்னடம் மாவட்டத்திலுள்ள பாட்கல் (Baktal) என்னுமிடத்துக் கல்வெட்டு அதனைப் பாழிக்கல் என்பதும், ஜோக் (Joag) என்னுமிடத்துப் பிற்காலக் கல்வெட்டு, அதனைத் தோக்கா என்பதும், நோக்கத் தக்கன.

சேர நாடு செந்தமிழ் மொழி வழங்கும் திருநாடாக விளங்கிய காலத்து வேந்தர்களே நாம் காணலுறும் சேர மன்னர்கள். கேரளோற்பத்தி கேரள மான்மியம் என்ற இரண்டு நூல்களும் மிகவும் பிற்பட்ட காலத்த வரான விசயநகர வேந்தர்களைப் பற்றியும் கூறுவதனால் இவை காலத்தால் மிகமிகப் பிற்பட்டவையென்பது


  1. S.I.I. Vol v. No. 788.
  2. Ibid. No. 784.
  3. M. EP, A. R. No 358 of 1927.
  4. S.III. Vol v. 782