பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 65



சொல்லாமலே விளங்கும். இவற்றைக் கொண்டு பண்டை நாளைச் சேர நாட்டைக் காண்பதற்கு வழி யில்லை. இவற்றுள், சங்க காலத்துக்கும் விசயநகர வேந்தர் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்து நிகழ்ச்சிகளுட் சில இவை கூறும் வரலாற்றுள் மறைந்திருக்கலாம்.

தொன்மையுடைய பொருளே பெருமையுடையது என்றொரு கொள்கை இடைக்காலத்தே அறிஞர் சிலருடைய கருத்தில் உண்டாயிற்று. அதனால் பல நூல்களைப் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவையென்றும் கூறும் செயல் தோன்றிற்று; அவ்வாறே சிலர் எழுதியும் வைத்தனர். உண்மையிலேயே தொன்மையும் பெருமையுமுடைய நூல்களைக் கண்டு சிலர் மனம் பொறாது, அவற்றின் தொன்மையைக் குறைத்தால் பெருமை குறையுமென்று மனப்பால் குடித்துத் தவறும் குழறுபடையும் நிறைந்த கருத்துகளால் தாம் வேண்டியவாறு எழுதலாயினர். தன் பெயர் நிலை பெறுவது விழைந்து தயனா தேவி கோயிலைத் தீயிட்டுக் கொளுத்திய யவனன்போலப் பழமையான சில தமிழ் நூற்களைக் காலத்தால் பிற்பட்டன என்று கூறிவிடின் அவை பெருமை குன்றிவிடும் என்று தம்முடைய செல்வாக்கையும் பதவியையும் துணையாகக் கொண்டு ஆராய்ச்சி யென்ற பெயரால் சொல்வலையிட்டுத் திரையிட முயன்றோரும் முயல்வோரும் உண்டு. இவ்வாறன்றி, காய்தல் உவத்தல் இன்றி, நடுவுநிலை திறம்பாது பண்டை நாளை நிலையினைக் காண்பது இப்போது மிக இன்றியமையாததாகிறது.