பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரர்கள் 69



நாட்டுக்கு இந்நாட்டுத் தேக்கு மரங்கள் மரக்கலங்களில் கொண்டு போகப்பட்டன. பெட்ரோலியசு என்னும் மேனாட்டறிஞர் இந்நாட்டினின்றும் சென்ற ஆடை வகைகளை மிகவும் பாராட்டிப் பேசியிருக்கின்றார்; இந்நாட்டிலிருந்து மேலை நாடுகட்கு ஆண்டுதோறும் 4,86,679 பவுன் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதியாயின என்று எழுதியுள்ளார். அந் நாளில் கடலகத்தே செல்லும் வணிகரின் கலங்களைத் தாக்கிக் கொள்ளை கொள்வதும், கடற்கரையில் வாழ்ந்த மக்கட்கு இன்னல் புரிவதும் தொழிலாகக் கொண்டு திரிந்த யாதர் (yats) கடம்பர் முதலாயினாரைக் கடலகத்தே எதிர்த்தழித்து மிக்க வென்றி எய்திய வகையால், இச் சேர மன்னர்கள் கடல் வாணிகம் செய்வார்க்கு நல்ல அரண் செய்து வாழ்ந்தனர். அதனால், அந் நாளில் சேர நாட்டுக் கலங்களைக் கண்டாலே பிறநாட்டுக் கலங்கள் கடலில் உரிமையுடன் இயங்குதற்கு அஞ்சின. “சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறர் கலம் செல்கலாது[1]” எனச் சான்றோர் உரைப்பது ஈண்டு நினைவு கூரத் தகுவது.

இச் சேரமன்னர்கட்குச் சங்க நூல்கள் மிகப் பல சிறப்புப் பெயர்களை வழங்குகின்றன. ஒருகால் அவை குடிப்பெயரோ எனவும் பிறிதொருகால் இயற் பெயரோ எனவும் ஆராய்ச்சியாளர்க்குப் பெருமயக்கம் எய்தியதுண்டு. ஏனைச் சோழ பாண்டியர்களின்