பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 சேர மன்னர் வரலாறு



வானமலையை வரம்பாக வுடையவன் என்றும் நேரே பொருள்படுவது காணலாம்.

சேர நாட்டுக்கு வட பகுதியில் ஏழில் மலையைத் தன்கண் கொண்டிருந்த நாட்டைக் கொண்கான நாடு என்று தமிழ் மக்கள் வழங்கினர். ஏழில் மலையைச் சொல்லத் தெரியாத பிற மக்கள் அதனை எலிமலை யென்று வழங்கினதும், இன்றும் அவ்வாறே வழங்குவதும் அவர்கள் அந்த எலி நாட்டை வடமொழிப்படுத்து மூசிக நாடு என்று பெயர் கொண்டதும் முன்பே கூறப்பட்டன. அதற்கு வடக்கிலுள்ள நாட்டுக்கு வானவாசி நாடு என்பது பெயர். மேலைக் கடற்கரை நாடுகளை முறைப்படுத் துரைத்த வியாச பாரதம், “திராவிடர் கேரள: ப்ராச்யா மூசிகா வானவாசிகா:[1]” என்று கூறுவது போதிய சான்றாகும். ஏழில் மலையைச் சூழ்ந்த நாட்டுக்கு மூசிக நாடென்று பெயர் வழங்கினமை “மூஷிக வம்சம்” என்ற நூலால்[2] தெரிகிறது. இதனால், மூசிக நாடெனப்படும் கொண்கான நாட்டுக்கு வடக்கில் வானவாசி நாடு இருப்பது தெளிய விளங்குகிறது வானவாசி என்பது கல்வெட்டுகளில்[3] வானவாசி யென்றும் குறிக்கப்படுகிறது படவே, சேர நாட்டின் வடக்கில் அதனை யடுத்து எல்லையாக இருந்தது வானவாசி நாடாயிற்று.

வானவாசி நாட்டை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு, முன்பிருந்தே ஆட்சிபுரிந்தவர் கடம்பர் எனப்படுவர். அவர்களது வான்வாசி நாட்டில் இப்போதுள்ள கோவா


  1. பாரதம்: பீஷ்ம் பருவம். ix. 58
  2. T.A.S. Vol. i p. 87-113.
  3. Bom. Gezet. kanaras, part-ii p. 77