பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 75


யால், வானவன் என்றும் வானவரம்பன் என்றும் சேர மன்னர்களைத் தாம் பாடிய பாட்டுகளில் அவர்கள் சிறப்பித்துப் பாடினார்கள்.

சேர நாட்டை யாண்ட மன்னர்கள் தங்கள் நாட்டைக் குட்டநாடென்றும் குடநாடென்றும் பிரித்து ஒரு காலத்தே ஆட்சி நடத்தினர். வட பகுதியில் குட நாட்டின் பகுதியாய் வானவாசி நாட்டை அடுத்திருந்த கொண்கான நாட்டைச் சேரர் குடிக்குரிய நன்னன் மரபினர் ஆட்சி புரிந்தனர். கொண்கான நாட்டின் கிழக்கில் உள்ள புன்னாடும் அந் நன்னன் மரபினர் ஆட்சியிலேயே இருந்தது. புன்னாட்டின் தெற்கில் - குட நாட்டுக்குக் கிழக்கில் இருந்த நாடு சேரர் குடியில் தோன்றிய வேளிர் தலைவரான அதியமான்கள் ஆட்சியில் இருந்தது; அதற்குப் பின்னர்த் தகடூர் நாடு எனப் பெயர் வழங்கலாயிற்று.

தெற்கே கோட்டாற்றுக்கரை கொல்லம் என்ற பகுதியை எல்லையாகக் கொண்ட குட்ட நாட்டில் குட்டுவரும், குடநாட்டில் குடக்கோக்களும் இருந்து சேர வரசைச் சிறப்பித்தனர். குட்ட நாட்டுக்கு வஞ்சி நகரும், குடநாட்டுக்குத் தொண்டியும் சிறந்த தலைநகரங்களாகும். ஒரு குடியில் தோன்றிய இருவருள் முன்னவன் குட்ட நாட்டிலும் பின்னவன் குட நாட்டிலும் இருந்து அரசியற்றுவன். குட்ட நாட்டு வேந்தன் குட்டுவர் தலை வனாகவும், குட நாட்டு வேந்தன் குடவர் கோவாகவும் விளங்குவர்.