பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 சேர மன்னர் வரலாறு



சில பல ஆண்டுகட்குப் பின்னர் அரசிளங் சிறுவர்கட்கு ஆட்சி நல்குதல் வேண்டிக் குட்ட நாட்டின் வட பகுதியையும் குடநாட்டின் தென் பகுதியையும் ஒன்றாய் இணைத்துப் பொறை நாடு எனத் தொகுத்துத் தொண்டியை அதற்குத் தலைநகராக்கினர். இவ்வாறே கொச்சி நாட்டின் வடகீழ்ப் பகுதி பூழிநாடு எனப் பிரிந்து இயலுவதாயிற்று. இந் நாடுகளில் இருந்து ஆட்சி புரிவோருள் முன்னோன் எவனோ அவனே முடிசூடும் உரிமையுடைய சேரமானாவன். பிற்காலத்தே பொறை நாட்டின் கிழக்கில் கொங்கு நாட்டை யடுத்த பகுதியைக் கடுங்கோ நாடு எனப் பிரிந்து ஆட்சி செய்தனர். அவ் வேந்தர் கடுங்கோ எனப்பட்டனர். இவ்வாற்றால் சேரநாடு, பண்டை நாளில், குட்டநாடு, பொறைநாடு, குடநாடு, கடுங்கோ நாடு எனப் பிரிந்திருந்தமை பெறப்படுகிறது. வேந்தரும் அது பற்றியே, “பல்குட்டுவர் வெல்கோவே[1]” “தெறலருந்தானைப் பொறையன்[2]” “குடக்கோ நெடுஞ்சேரலாதன், பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று பெயர் கூறப்படுவராயினர். இவ்வாறு வேறு வேறாகக் கூறப் படினும், சேரமான் ஒருவனே ஒருகால் சேரல் என்றும், வானவன் என்றும், குட்டுவன் என்றும், இரும்பொறை என்றும் கூறப்படுவன். இதனால் இவர்கள் அனைவரும் சேரர் குடிக்குரியோர் என்பது துணிபாம். “குடபுலம் காவலர் மருமான், ஒன்னார் வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த, எழவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்[3]” என்றாற்போல்


  1. மதுரை, 105,
  2. நற். 18.
  3. சிறுபாண். 47.