பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 சேர மன்னர் வரலாறு



சோழர் முடிவேந்தனாய்த் திகழ்ந்தான். இதே முறைதான் பண்டை நாளைத் தமிழ்வேந்தர் அரசுரிமை முறையாக இருந்தது. ஆகவே, தந்தைக்குப்பின் அவனுடைய மூத்த மகன்; அவற்குப்பின் அவனுடைய மூத்தமகன் என வரும் அரசியல் தாயமுறை (Prinogeniture) தமிழ் நாட்டுக்குரியதன்று என அறியலாம்.

இவ்வாறே சேர மன்னருள் உதியஞ்சேரலாதன் என்பானுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என மக்கள் இருவர் உண்டு. இமயவரம்பன் சேரமானாய் முடிசூடியிருந்த பின், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரமானாய் முடிசூடிக் கொண்டான் அவற்குப்பின் இமயவரம்பன் மக்களுள் மூத்தவனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் அவன் பின் செங்குட்டுவனும் அவற்குப்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் சேர நாட்டு முடிவேந்தராய் விளங்கினர்.

பின்னர், அரசர் குடியிற் பிறந்த அரசிளஞ் சிறுவர் கட்கு அரசாளும் திறம் நல்கவேண்டி நாட்டைச் சிறு சிறு நாடுகளாக வகுத்து ஆளும் முறையுண்டாயிற்று; அதன் பயனாக ஏனை நாடுகளைப்போலச் சேர நாடு சிறுசிறு நாடுகளாகப் பிரிய வேண்டி வந்தது. இது பற்றியே ஒரு நாழிகை தொலைக்குள் ஒன்பது நாடுகளைக் கடந்தாக வேண்டும் என்ற கருத்துடைய பழமொழி யொன்று இன்றும் மலையாள நாட்டில் வழங்குகிறது: இடைக் காலத்தில் சேர நாடு பதினெட்டுச் சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தமைக்கும் இதுவே காரணம்.