பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 81



பொய்கைகள்) பல பல்கியிருப்பது பற்றி இந் நாடு குட்டநாடு எனப் பண்டை நாளைச் சான்றோர்களால் பெயர் வழங்கப்பட்ட தென்னலாம். இங்குள்ள குட்டங் களில் பல ஆழ்ந்து அகன்று சிறுசிறு மரக்கலங்களும் நாவாய்களும் இனிது இயங்குதற் கேற்ப அமைந்துள்ளது. இங்கே வாழ்ந்த மக்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களும், மலைபடு பொருள்களும், காடுபடு பொருள்களும், கடல்படு பொருள்களும் பெருகக் கிடைத்தமையால் அவர்கள் கடற்கப்பாலுள்ள நாட்டவரோடு பெருவாணிகம் செய்து சிறந்தனர். அதனால் மேனாட்டு யவனரும் கீழைநாட்டுச் சீனரும் பிறரு இந் நாட்டில் போக்குவரவு புரிந்தனர். அரபியா, ஆப்பிரிக்கா என்ற நாட்டுக் கடற்கரையில் குட்ட நாட்டுத் தமிழ்மக்கள் சிலர் குடியேறி இருந்தனர் என்று மேனாட்டவருடைய பழஞ்சுவடிகள் கூறுகின்றன. இவ்வாறு பெருங்கடல் கடந்து சென்று அரிய வாணிகம் செய்த பெருந்துணிவுடைய மக்கள் தென்கடற்கரை நாட்டுத் தென் தமிழரல்லது வடவாரியரல்லர் எனக் கென்னடி (Mr. Kennady) என்பார் கூறியிருப்பது ஈண்டு அறிஞர்கள் நினைவு கூரத் தக்கதோர் உண்மை.

இக் குட்ட நாட்டுக்குத் தலைநகரம், சேர நாட்டுக்குப் பொதுவாகத் தலைநகரமெனக் குறிக்கப் பெற்ற வஞ்சிமா நகரமாகும். கடற்கரையை ஒட்டித் தொடர்ந்து விளங்கும் காயற்குட்டத்தின் கீழ்க்கரையில் இந் நகரம் இருந்திருக்கிறது. இக் குட்டம், கொச்சி, கொடுங்கோளூர், சேர்த்துவாய் என்ற மூன்றிடங்களில் கடலொடு கலந்து கொள்ளுகிறது. கொங்குங்கோளூர்