பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 87



இவன் ஆதன் வழி வந்தவன் என்பது பெறப்படும் அந்த ஆதனைப்பற்றி இதுகாறும் ஒன்றும் தெரிந்திலது. ஆதன் அவினி யென்றொரு சேரமான் ஐங்குறு நூற்றிற் காணப்படுகின்றான். அந்த அவினியும் ஆதன் வழிவந் தோனாகத் தெரியினும், அவ்வாதன் சேரமானாகிய ஆதன் அல்லன் என்பது அவன் சேரல் ஆதன் எனப் படாமையால் விளங்குகிறது.

இச் சேரலாதன் பெருஞ்சோற்றுதியன் எனப் புறநானூற்றைத் தொகுத்த சான்றோரால் குறிக்கப் படுவன், மாமூலனார் முதலிய சங்கச் சான்றோர் உதியஞ்சேரல் என்றும் உதியன் என்றும் வழங்கு கின்றனர். இவன் காலத்தே குட்டநாட்டுக்குத் தெற்கில் வேளிர் பலர் வாழ்ந்தனர். அவர் வாழ்ந்த நாடு வேணாடு எனப்படும். மேனாட்டு யவனர் குறிப்புகள், கொல்லத்துக்குத் தென் பகுதியில் ஆய்வேள் வழியினர் ஆட்சி செய்தனர் என்றே குறிக்கின்றன. பிற்காலத்து வேள்விக்குடிச் செப்பேடும்[1] இந் நாட்டு வேளிரை ஆய்வேள் என்று குறிக்கின்றது. இப் பகுதியிலிருந்து இனிய அரசு புரிந்த திருவிதாங்கூர் வேந்தர்கள் தம்மை வேணாட்டடிகள் என்பதும் இக் கருத்தை வற்புறுத்தும். இவ் வேணாட்டின் தெற்கெல்லை தெக்கலை எனவும், வடக்கெல்லை வக்கலை எனவும் இப்போது வழங்குகின்றன. இக் கருத்தை அறியாமையால் சிலர்[2] வேணாடு என்பது வானவனாடு என்பதன் திரிபாகக் கூறுகின்றனர்.


  1. EP. Indi. vol. xvii. No. 16. p. 303.
  2. k. P. P. Menon’s History of kerala. Vol ii.