பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 சேர மன்னர் வரலாறு

ஒடுங்காவுள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்[1]” என்று பாடினர். இதனால் உதியனது புகழ் தமிழகம் முழுவதும் பரவிற்று. பல இடங்களில் ஊர்கள் நிறுவப் பெற்றன. நாட்டில் செல்வப் பெருக்கும் நல்வாழ்வும் சிறந்தன. இச் சிறப்புப் பற்றி நாட்டில் உதியம் பேருர், உதியஞ்சேரி என்ற பெயருடைய ஊர்கள் உண்டாயின. அவற்றுட் சில இன்றும் நின்று உதியஞ் சேரலின் உயிர்ப் புகழை நினைப்பித்துக் கொண்டிருக்கின்றன.

பண்டைத் தமிழ் வேந்தர் முத்தமிழையும் வளர்ப்பது தமது கடனாகக் கொண்டவர். அம் மூன்றும் இயல், இசை, கூத்து என்பன. கூத்து கூத்தர்பாலும், இசை, பாணர் பொருநர் முதலியோர் பாலும், இயல் புலவர் பாலும் வளர்ந்தன. இவற்றால் நாட்டு மக்களுடைய உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் பண்பட்டன. அதனால் கூத்தர்க்கு வேண்டுவன நல்கிக் கூத்தையும், பாணர்க்குக் கொடை வழங்கி இசையையும், புலவர்க்குப் பரிசில் கொடுத்து இயலையும் வளர்த்தனர். இதனை ஏனைச் சோழபாண்டியர் செய்தது போலவே சேரமானாகிய உதியஞ் சேரலும் செய்தான்; ஆயினும், போர்த்துறையில் மிக்க ஈடுபாடுடையனாதலால், இசை வாணரை வரவேற்றுப் போர்மறவரிடையே இனிய குழலிசையை இசைக்குமாறு புதியதோர் ஏற்பாட் டினைச் செய்தான். மறவரது மறப்பண்பையும், இசை, தனது நலத்தால் மாற்றிவிடும் என்பது உணர்ந்து,


  1. புறம் 8.