பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 93



புறநானூற்றுப் பழைய உரைகாரர்,[1] இம் முடிநாகனார் பாட்டின் உரையில் “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோன்” இப்பெருஞ்சோற்றுதியற்கு முன்னோன் என்றும், முன்னோன் செய்கை இவ்வுதியஞ்சேரல்மேல் ஏற்றிக் கூறப்படுகிறதென்றும் கூறாமையால், இதனைக் கண்டோர், இச்சேரலாதன் பாரத காலத்தவன் என்றும், பாரத வீரர்கட்குப் பெருஞ்சோறு அளித்தவன் இவனே என்றும், இவனது இச்செயலைப் பாராட்டிப் பாடும் இம்முடிநாகனாரும் பாரதகாலத்தவர் என்றும் கருதி உரைப்பாராயினர். இச்சான்றோரது பெயர் தலைச்சங்கப் நிரலுட் காணப் படுவதால், தலைச்சங்க காலம் பாரத காலத்தோடு ஒப்புநோக்கும் தொன்மையுடையது என்பது பற்றி, பெருஞ்சோற்றுதியனைப் பாரதகாலத்தவன் என்று துணிதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டாவதாயிற்று இமய வரம்பன் தந்தையாகிய (நாம் மேற்கொண்டுரைக்கும்) உதியஞ்சேரல் பாரதகாலத்தவனாதற்கு இன்யின்மையால், பெருஞ்சோற்றுதியன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு[2] என்றும், “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை , முதியர்ப் பேணிய உதியஞ்சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை[3]“ என மாமூலனார் கூறுவது பாரதப்போரில் நிகழ்ந்தது என்றும் திரு.மு. இராகவையங்கார் கூறுவர்.

பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனே பாரதகாலத் தவன் என்னும் கூற்றை மேற்கொண்டு ஆராயலுற்ற


  1. புறம். 2.
  2. சேரவேந்தர் செய்யுட்கோவை. பக். ix.
  3. அகம். 235.