பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 95



கீரனார் பாட்டும்[1] மாமூலனார் பாட்டும்[2] இச்சேரலாதனுடைய போர் வன்மையையும் கொடைச் சிறப்பையும் உணர்த்தி நிற்கின்றன. இத்தகைய செம்மல் பாரதப் போரில் குருட்சேத்திரத்தில் பாரத வீரர்கட்குச் சோறு போடும் பணியில் தலைமை தாங்கினான் என்பது உண்மைக்குப் பொருத்தமாக இல்லை” என்பது அவர்கள் உரை[3].

வேறு சிலர், இக்கருத்தே உடையராயினும், உதியஞ்சேரலாதன் தன்னுடைய முன்னோருள் சிலர் பாரதப் போரில் இறந்தாராக, அவர்கட்குச் செய்த ஆண்டு விழாவில் இப்பெருஞ்சோற்றை நல்கி யிருக்க வேண்டும் என[4] உரைக்கின்றனர்.

பெருஞ்சோற்றுதியன் வரலாற்றை முடிக்குமுன் இவ்வுரைகளைப் பற்றிச் சில கூறுவது கடனாகின்றது. “பெருஞ்சோறு” என்பதற்குச் சிலர் நெற்சோறு என்று பொருள் எனக் கருதிக் கொண்டு, பாண்டவ கெளரவர்கள் கோதுமை, உண்பர் என்றும், சேரமான் நெற்சோறு கொடுத்தான் என்றும் உரைக்கின்றனர். பெருஞ்சோறு என்பது நெற்சோறாகத்தான் இருக்க வேண்டும் என்பதன்று; வரகுச் சோறு, கம்பஞ்சோறு, தினைச்சோறு, கோதுமைச் சோறு என வழங்குவ துண்மையின் பெருஞ்சோறு என்றது ஈண்டுப் பேருணவு என்னும் பொருளதாம் என அறிதல் வேண்டும்.


  1. நற். 113.
  2. அகம். 65.
  3. P.T. S. Ayengar’s History of the Tamils. p. 492-4.
  4. Chera kings of Sangam Period by K.G. Sesha Iyer p.7.