பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 97


விழாவாக இப் பெருஞ்சோறு அளிக்கப்பட்டது என்ற கருத்துக் கதகளியின் வரலாறு நோக்காது எழுந்ததாகும். சங்ககாலச் சேரவரசு மறைந்தபின், வடநாட்டார் அதனுட் புகுந்து அதனைக் கேரள நாடாக மாற்றிய போது ஆங்காங்குத் தோன்றிய சிற்றரசர்களுள் கொட்டாரக்கரைச் சிற்றரசரொருவர் இக் கதகளிக் கூத்தை முதற்கண் ஏற்படுத்தினார்[1]; இச் சிற்றரசர் பெருஞ்சோற்றுதியனுக்குப் பன்னூறாண்டு பிற்பட்டவர்; பிற்பட்ட காலத்துத் தோன்றிய ஒருவகைக் கூத்தைப் பெருஞ்சோற்றுதியன் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறுவது ஆராய்ச்சி நெறிக்கு அறமாக இல்லை.

பிற்காலத்தில் தோன்றிய பாரதக் கூத்தின் அடியாகத் தோன்றியவை கம்ப சேவை, கம்பக் கூத்து முதலியனவாதலால் இவற்றைக் காட்டிப் பெருஞ் சோற்றுதியன் பெருஞ்சோறளித்த நிகழ்ச்சியை மறுப்பது பொருத்தமாக இல்லை.

இத்துணையும் கூறியதனால், பெருஞ்சோற் றுதியன் கொங்கு நாட்டில் தான் பெற்ற வெற்றி குறித்துச் செய்த விழாவில் மேற்கொண்டு மகிழ்ந்து ஆற்றிய பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத்துறைச் செயல், அவனுக்கே சிறப்பாய் அமைந்தமையின், அவன் பெருஞ்சோற்றுதியன் எனச் சிறப்பிக்கப் பெற்றான் என்பதும், அதனைப் பாராட்ட வந்த முடிநாகனார் ஒப்புமை பற்றி முன்னோன் ஒருவன் செயலை இவன்மேல் ஏற்றிக் கூறினார் என்பதும் தெளியப்படும்.


  1. K.P.P. Menon’s History of Kerala Vol. in. p. 525.