பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 131 "என்னடா, பெரிய விசயம். மருந்து - ஊசிக்குத்தான் பணம் குடுத்திட்ட, கட்டுக் கட்டினவனுக்கு அஞ்சு ருபா குடு. உனக்கோ சர்க்கரை அது இது ஒண்ணுமில்ல. வயல்ல நடக்கிற வனுக்கு அதெல்லாம் ஏன் வருது? டாக்டருக்கெல்லாம் நீ ஒண்ணும் குடுக்கவானாம், போ!' உளம் நெகிழ்ந்து போகிறது. "ரொம்ப நன்றிங்க. இது. இது மட்டுமில்லய்யா, அந்தக் கழுத. அதா மவ, அந்தப் பய மகங்கூட, அதா அன்னக்கி வந்திருந்தானே, அவங்கூட சினிமால வாராப்பல மோட்டார் சைக்கிள் பின்னால் குந்திட்டுச் சுத்துறாப்ல கொடிமங்கலம் ஐயர் கிளம்பில பாத்தேன்னு பண்ணக்குடி அண்ணாச்சி இப்ப சொன்னாரய்யா. அப்படியே வெட்டிப் போடணும்போல இருக்கு. என் குடில, என் ரத்தத்தில பெறந்து எங்க எனத்துக்கே துரோகம் செஞ்சிட்டாளே? கேட்டதிலேந்து பொறுக்கலய்யா!" - "அட... பாவி. இதுக்கேண்டா நீ இப்பிடி அழுவுறே? அதா மூலையில பாத்தியா..." திண்ணையின் மேற்கு மூலையில் வைக்கோல் சவுரி கூளம் தொங்க ஒரு குருவி உட்கார்ந்திருக்கிறது. "என் கண்ணுக்கு நல்லாத் தெரியல இப்ப. ஆனா, அதுங்க விர்விர்ரென்று போறதும் வரதும் குப்பையும் கூளமும் கொண்டு போறதும் நன்னாத் தெரியிறது. ஒடி ஒடிக் கூடு கட்டும். பிறகு மாத்தி மாத்திக் குஞ்சு பொரிச்சதும் சோறு குடுக்கும். சரியா இருபத்தோராம் நாளு, கூட்டவிட்டு குஞ்சு வெளியே வரும். பறந்துபோக அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுக்கும். பறந்து போயிடும். பிறகு அது வரவே வராது. போயே போயிடும். இதே காரியமா நான் வாட்ச் பண்ணிருக்கேன். அறுப்பான நிலத்த மறுபடி காயப் போட்டு, கிடயவிட்டு தண்ணி வுட்டு உழுது விதக்கிறாப்பல, இதுங்க கூட்டை சீர் பண்ணும். மறுபடி முட்ட வைக்கும். திரும்பிக் குஞ்சு பொரிச்சு ஆகாரம் குடுக்கும். ஒரு ஜோடி, பாரு மூணு தரம் முட்ட வச்சதும் ஆண் என்ன பண்ணிச்சிங்கற? புதுசா ஒரு பெட்டயக் கூட்டி வந்திடுத்து. அந்தக் கிழப் பெட்டைக் குருவி நேத்து தனியா உக்காந்து இருந்தது." அவர் சிரிக்கிறார். "நீங்க சிரிக்கிறீங்கய்யா..."