பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 141 குஞ்சிதம்..?. வெளியூர்க்காரி. பள்ளக்குடிப் பெண் தான் என்று சொல்வார்கள். ஓடிவந்தவள். பார்க்கச் சுருட்டைமுடியும், புருபுருவென்ற முகமுமாக அழகாக இருக்கிறாள். ஆனால் திரும்ப ஊருக்குப் போகமுடியாமல், இங்கேதான் உயர்ந்தசாதி என்று சொல்லிக்கொண்டு மேற்குடியாரை அண்டி ஊழியம் செய் கிறாள். அவர்களுக்கே உடம்பை விற்றுத் தின்னும் பிழைப்பா யிருக்கிறாள். அக்கிரகாரத்திலும், வேளாளர் தெருவிலும் கோலோச்சும் விடலைகள் "அவ என்ன சாதி தெரியுமில்ல? என்று கண்ணடிப்பார்கள். தோளைப் போர்த்திக்கொண்டு பவ்வியமாக, நாங்க வெள்ளாழருங்க!' என்பாள். ஒரு பெண் மீறினால், உதிரிப்பூவாகக் காலில் மிதிபட வேண்டும். கண்கள் சுரந்து சுரந்து பார்வையை மறைக்கிறது. சம்முகம் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். நடவான வயல்கள் கண்களிலே தென்படுகின்றன. சில இடங்களில் கயிறு கட்டிய வரிசைகளாய் பாய் நடவு நட்டிருக்கிறார்கள். திருமணத்தாலி பூட்டிக்கொண்ட மங்கல மகளிர் அணி அணியாக நிற்பது போல் ஒரு காட்சி. இவர்களுடைய மண்ணில் எதுவும் முடியவில்லை. மகன், மகள், கட்டாக இருந்த கூட்டாளிகள் எல்லோருமே சிதறிப் போகிறார்கள். சிதறிச் சிதறிப் போகிறார்கள். சின்னா பின்னமாகிப் போய் மானுட உறவின் தொடர்புகள் வறண்டு பொடியாகிப் போய். எல்லோரும் வாருங்கள்! ஒன்றாகச் சேருங்கள்! உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்! உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்! ஏகோபித்த குரல் முழங்க, ஆயிரம் பதினாயிரமாக நில உரிமைக்காரர்களின் அடியாட்களையும் அடக்குமுறையையும் எதிர்த்து நின்று இரத்தம் சிந்தத் துணைநின்ற சக்திகள் துண்டு துண்டாகச் சிதறிப்போகின்றன. சம்முகம் கண்களை மூடிக்கொள்கிறார்; தாள முடிய வில்லை.