பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சேற்றில் மனிதர்கள் சினிமாவில் மட்டுமே கண்டிருக்கும் சென்னைப் பட்டினம், மாடி பஸ், பகலைப் போல் இரவிலும் ஒளிரும் சாலைகள், இருபது மாடிக் கட்டிடங்கள், மின்சார ரயில் வண்டி, குளுகுளுவென்று வெய்யிலிலும் குளுமையாக இருக்கும் சினிமாக் கட்டிடங்கள், சிலைகள் எல்லா விந்தைகளையும் பார்க்கும் ஆசை அவனுக்கு அடங்கவில்லை. வண்டி வரும் சமயத்தில் நின்று எப்படியேனும் புகுந்துவிட்டால் முதலாளி இறக்கிவிட மாட்டார் என்று குழந்தைபோல் நம்பிக்கொண்டு நிற்கிறான். சம்முகம் வெளியே வருபவர், இவன் அசட்டுச் சிரிப்புடன் நிற்பதைப் பார்த்து விடுகிறார். திடுக்கிட்டாற்போல் விழிக்கிறார். “ஏண்டா, நீ எப்ப வந்த?..." "கொஞ்ச மின்னாடி’ "நாங்க வந்த பஸ்ஸிலயா வந்த?. நீ எதுக்குடா வந்த, இப்ப?.” "நானும் வார முதலாளி, நானும் பேரணில கலந்து கோசம் குடுக்கறேன் முதலாளி...!" தலையைச் சொறிகிறான். 'அட...ப்பாவி? நீ வரப்போறேன்னே தெரியாது? அதெல்லாம் இப்ப நீயும் வரதுக்கில்ல ஏண்டாலே, சின்னக் குளந்தபோல ஒடி வந்திருக்கிற? உங்கையாக்குத் தெரியுமா?..." அவன் தெரியாது என்று தலையாட்டுகிறான். "ஒரு தரம் இப்ப கூட்டிட்டுப் போங்க முதலாளி.” "இப்ப வந்து என்னடால வம்பு குடுக்கற? உன்னையாவது கூட்டிட்டுப் போறதாவது? பேசாம வந்த வழிய திரும்பிப்போ. நாம யாருமில்லன்னா, வயல்ல மாட்டவுட்டு அடிச்சாலும் கேள்வி முறயில்ல. கோவம் வரும்படி நடக்கிற!” "இல்ல முதலாளி, இந்த ஒரு தடவை." சம்முகத்துக்குக் கோபம் வருகிறது. 'முதலாளி முதலாளின்னு கழுத்தறுக்கிறடா நீ! இனிமே முதலாளின்னு கூப்பிடக்கூடாது!” "பின்ன எப்பிடிங்க கூப்பிடுறது?” இவனைச் சற்று எட்டத் தனியாக அழைத்துச் செல்கிறார். "ஏண்டால இப்படி மானத்த வாங்குற? போயி ஊருல வேலயப் பாரு. அடுத்த தடவை எதுன்னாலும் உன்னையே அனுப்பச் சொல்றேன்.”