பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 15 வீட்டை விட்டிறங்கி, ஆற்றுக்கரை மேட்டோடு, ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். இவர்கள் தெருவைத் தாண்டவில்லை. வடிவு, அவன் தம்பி சுருளிப்பயல், செவத்தையன், அம்மாசி, பழனி எல்லோரும் கும்பலாக வருகின்றனர். சில பெண்பிள்ளைகள், முடிபரக்க சில பொடிசுகள். "மொதலாளி' சம்முகத்துக்குக் கால் தடுக்குவது போலிருக்கிறது. அவருக்குச் சகுனத்தில் எல்லாம் நம்பிக்கை என்பதில்லை. மூடநம்பிக்கைகளைப் பிடித்துத் தள்ளவேண்டும் என்ற முற்போக்குக் கோட்டில் நிற்பவர்தாம். "நேத்தே வந்தமுங்க. முதலாளி வந்து சொல்லுங்க, காரியக்காரன் படலய வச்சுத் தோப்ப வளச்சிருக்கிறா, நடவு நட்டாச்சு. வயல்ல எறங்கக்கூடாதுங்கறா..." இந்த முறையீட்டைக் கேட்ட பின்னரே சம்முகத்துக்கு பளிச்சென்று நிலைமை புலனாகிறது. ஐயனார் குளத்துக் குடியிருப்பில் இருந்து இறந்துபோனவரின் சடலத்தை ஆற்றுக்கரைக் காட்டுக்குக் கொண்டுவர வழியில்லை! இந்தப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு பல தடவைகள் கோரிக்கை மனு கொடுத்துவிட்டார்கள். ஐயனார் குளம் மட்டும் இத்தகைய பிரச்னைக்குரிய இடம் அல்ல. பல குடியிருப்புகளின் நிலையும் இதுவே. "நேத்து வந்தம் முதலாளி. நீங்க இல்ல. நாங்கல்லாமும் தோப்புக் குத்தவைக்காரங்ககிட்ட பொனங்கொண்டு போக வழி வுடனும்னு கேட்டோம். பண்ணக்காரரில்ல, அவுரு சொல்லாம நான் துறந்து வுடறதுக்கில்லன்னு மணிகாரன் பிச்சமுத்து ஒரு புடியா படலயப்போட்டுக் கெட்டி வச்சிட்டான்." “ஏண்டா, இதுக்குப் போயி அழுவுறீங்க? படலயப் பிச்செறிய முடியாது உங்களால? பிச்செறிஞ்சிட்டுப் பொணத்தத் துக்கிட்டுப் போங்கடா? நா இப்ப அவசரமாப் போரே. வந்ததும் மத்ததப் பேசிக்கலாம்!” நெற்றியில் வியர்வை பூக்கிறது. காலில் ஊமை வலி முனகுகிறது. அவர்கள் கரையோடு நடக்கின்றனர்.