பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற மாதிரியிலான முரண்பட்ட உண்மைகள் அப்போது என்னைக் கவர்ந்ததுண்டு. அந்தப் பருவத்தில் அதற்கு மேற்பட்ட சிந்தனைகள் வளர வாய்ப்புகள் ஏதுமில்லை. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம், இவ்வகையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த வகையில் சமுதாய உணர்வைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது எனலாம். இந்துமத சமுதாயம் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், நான்கு வருணப் பாகுபாடு வாழ்க்கை முறையில் வேரூன்றிவிட்டதை மறுப்பதற்கில்லை. இந்த நால்வருண அமைப்புக்கு அப்பாற் பட்டவர்களையே பஞ்சமர் - ஐந்தாவது படியில் உள்ளவர்கள் அல்லது மிகத் தாழ்ந்தவர்கள் என்றும். அடிமைகளாகக் கொள்ளப்படுபவர்கள் என்றும் தீர்ந்திருக்கிறது. நான்கு வருணங்களுக்குள் வராமல், வெளிநாட்டிலிருந்து வந்த இனத்தாரைப் பஞ்சமர் என்று ஐந்தாம் வருணத்தவராக மறந்தும் குறிப்பிடுவதில்லை. ஏன்? அவர்களுடைய வெள்ளைத்தோல், அவர்களை ஆளும் தகுதிக்குரியதாக நம்மை ஒப்புக்கொள்ளச் செய்திருக்கிறது எனவே, நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது. கரும பயன் - அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம். - அந்த நியாயங்களால் உறுதிபெற்ற சண்டாள தருமங்களை எந்த மனிஷா பஞ்சகங்களும் அசைத்துவிடவில்லை. அரிசனங்கள் என்ற பெயர் மாற்றமும் சமுதாயப் புரட்சியைச் சாதித்துவிடவில்லை. அவர்களை உயர் சாதிக் கோயில்களில் நுழையச் செய்தும், பார்ப்பனர் குடியிருப்புக்களில் உரிமை கோரச்செய்து சட்டங்கள் இயற்றியும் சலசலப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறோம். ஏழை என்றும் அடிமை என்றும் இந்தியாவில் இல்லையே' என்று சமத்துவம் சட்ட பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. கல்விச் சலுகை, வேலைச் சலுகைகளின் ஒதுக்கீடுகள், சாதிப் பிரிவற்ற ஒரே சமுதாயம் என்ற இலட்சியத்தைக் குறிப்பாக்கியே நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன. நந்தன் காலத்திலிருந்து பார்த்தால், இன்றுவரை, அரசியல், சமுதாய, அறிவியல், பொருளாதார அரங்குகளில் புதிய புதிய ஒளிகள் பிறந்திருப்பது தெரியவருகிறது. எனவே, தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர் என்றறியும் அவா என்னுள் குடைந்துகொண்டே இருந்தது. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இந்த முப்பத்து நான்காண்டுகளில் துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக்கொண்டு சென்றிருப்பதன் உண்மையும் உறுத்திக்கொண்டே