பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎾᏮ சேற்றில் மனிதர்கள் ஒன்றில் சரிகை வேட்டியும் கழுத்தில் ஒன்றை உருத்திராக்கமும் விளங்க, ஒரு பெரியவர் விரல்களில் மோதிரங்களுடன் நாதசுரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொன்றில் பரத நாட்டியக் கோலத்தில் ஒரு பெண்மணி புன்னகை செய்கிறாள். இடையே சில சிறிய புகைப்படங்கள் மாட்டப் பெற்றிருக்கின்றன. நேருவின் அருகில் அதே நாட்டியப் பெண் சதங்கையுடன் நிற்கிறாள். இன்னொன்றில் அந்த நாதசுரக் கலைஞருக்கு யாரோ மாலையிடுகிறார்கள். காந்திக்கு மருட்சியாக இருக்கிறது. நாதசுரம், நாட்டியம், சின்ன மேளம், நாகப்பட்டினத்துப் பொதுமகளிரைக் குறிக்கும் சில ஈனச்சொற்கள் எல்லாம் சிந்தையில் மோதுகின்றன. நாற்று நடவு, மருந்துத் தெளிப்பு, உரமிடுதல், களைபிடுங்குதல் என்று வெயில் மழையில் அலைந்து பாடுபடாது போனாலும், மேல்சாதிக்கார ஆண்கள் வண்டி கட்டிக்கொண்டு, திருவாரூர், நாகப்பட்டினம் என்று பொதுமகளிரை நாடிச் சென்றால்தான் கெளரவம் என்று சொல்லிக் கேட்டிருக்கிறாள். இதை எல்லாம் பற்றிக் கொச்சையாக அவள் அப்பாகூட பேசியதுண்டு. இந்த இவன் யார் வீட்டுக்கு அவளைக் கூட்டி வந்திருக்கிறான்? அந்த அப்பா இங்கே யார் வீட்டில் இருக்கிறார்? அவளுக்கு பொருந்தவேயில்லை. இனந்தெரியாத பயம் ஆட்கொள்ளுகிறது. உள்ளிருந்து சற்றே பருமனாக, சிவந்த மேனியில் ஊட்டத்தின் மினுமினுப்பு இளமைக்கட்டும் மேவியிருக்க ஒரம்மாள் - நாற்பது வயசுக்கு மதிக்கக்கூடிய பெண்மணி வருகிறாள். நேர்வகிடுடன் கருகருவென்ற கூந்தலைக் கோடாலி முடிச்சாக முடிந்திருக்கிறாள். அந்த முடிச்சு சிறிய தேங்காயள வுக்கு இறுகியிருக்கிறது. வளைந்த புருவங்களுக்கிடையே நீண்ட குங்குமத்திலகம். இரண்டு மூக்கிலும், சுடர் விடும் வயிரப் பொட்டுக்கள். செவிகளில் சிவப்புப் பிரபை சூடிய வயிரத் தோடுகள். அரக்கும் மஞ்சளுமானதொரு சின்னாளப்பட்டுப் புடவையில் மிக எடுப்பாக இருக்கிறாள். புன்னகை செய்கையில் கன்னங்கள் குழிகின்றன. அந்தப் படத்தில் இருக்கும் பெண்மணி தான் அவள்.