பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

91

 கோயில்களில் முழவும் சங்கும் யாழும் முழங்குகின்றன.[1] அந்தணர் வேள்வியும், அருமறைத்துழனியும், அவற்றின் வேறாகச் செந்தமிழ்க் கீதமும் சிறந்து விளங்குகின்றன[2] செந்தமிழரும் தெய்வமறை நாவலரும் ஏனைச் செழுங்கலை வாணரும் வேறுபாடின்றிச் சென்று இறைவனை வழிபடு கின்றனர்.

இறைவழிபாடு கோயில்தோறும் இனிது இயலுகின்றது. மகளிரும் ஆடவரும் மாமலர் கொணர்ந்து வழிபடுகின்றனர். மணமாகாத கன்னிப்பெண்கள், நறுமலரும் தெண்புனலும் தூபமும் சாந்தமும் கொணர்ந்து வழி பாடாற்றுகின்றனர். அந்திப்போதில், அடியவர்கள் தூப தீபங்களுடன்,

"சந்திபல அர்ச்சனைகள்" செய்கின்றனர். இவ்வாறே முற்றத்துறந்த முனிச்செல்வர்கள் வழிபாடு செய்து வாழ்கின்றனர். திருக்குற்றால மலைப்பகுதியில், பிடியானைகளும் களிறுகளும் வேங்கைக் கொத்துக்களைத் தலையிற்கொண்டு இறைவனை வழிபடுகின்றன.

சிவனடியார் கூட்டத்தைச் சிவமே என விரும்பிப் பேணுவது செந்தமிழ் நாட்டுச் சைவ நூல் வகுக்கும் அறங்களுள் ஒன்று. இதனால், இவர்கட்குச் சிவன்பாலுள்ள பேரன்பு தெற்றென விளங்குகிறது. சிவனடியார் என்பவர், பண்டைத் தவத்தாலும் அடியாரொடு பயிலும் பயிற்சியாலும் சிவன்பால்பேரன்புற்றுத் தொண்டுசெய்பவராவர் [3] என்று ஞானசம்பந்தர் அவர்களைச் சிறப்பித்திருக்கின்றார். இத் தொண்டர் கூட்டுறவால், வினைத்தொடர்பும் அதுவாயிலாக அறியாமையும் நீங்கும்.[4] அதனுள் அவர் தொடர்பே சைவர்கள் விரும்பற்பாலது. [5] இவர்கள் இறைவன் புகழையல்லது வேறு புகழ்களைச் செவியிற் கொள்ளார்.[6] இத்தொண்டர்களை உளத்திற்கொண்டு போற்றுபவர் வினையின் நீங்கி உண்மை அறிவு விளக்கம் பெறுவர். [7] அவர்-


  1. ஞானசம் 330:8
  2. ஞானசம் 286:3
  3. ஞானசம் 305:7
  4. ஞானசம் 242:2
  5. ஞானசம் 364:6
  6. ஞானசம் 251:4
  7. ஞானசம் 369:2