பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

93

ஞானசம்பந்தர் காலத்தே தமிழ் நாட்டின் வடபகுதியைப் பல்லவ வேந்தர் ஆட்சி புரிந்து வந்தனரென முன்பே கூறி னோம். அக்காலத்தே, வடநாட்டவரும் பிறநாட்டினரும் தமிழகத்திற்குப் போந்து இசை பயின்றனர். அந்நாளில் தமிழகத்தில் இசைத்தமிழ் மிக்க விளக்கமுற்றிருந்தது. திருக்கோயில்களில் "அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும்"[1] சிறப்புற்று விளங்கின. செல்வமனைகளிலும் மகளிர் விளையாட்டயரும் பூங்காக்களிலும் தமிழின் இனிய இசை மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஞானசம்பந்தர், " வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகார், ஊசல் மிசையேறி இனிதாக இசைபாடு உதவி மாணிகுழியே"[2] எனவும், ஊறுபொருள் இன் தமிழ் இயற்கிளவி தேறும் மடமாதருடன், வேறுதிசை ஆட வர்கள் கூர இசைதேரும் எழில் வேதவனமே" [3]எனவும் குறிக்கின்றார். அந்நாளில், எண்ணும் எழுத்தும் போல இசையும் தமிழ் மக்களால் கண்ணெனக் கருதிப் பயிலப் பெற்ற குறிப்பு,"எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார், கண்ணும் முதலாயகடவுட்கு இடம்"[4] என்பதனால்தெளிவாக வலியுறுகிறது. புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள குடுமியான்மலையில் இசைக் கல்வெட்டொன்று[5] உளது. அது பல்லவ காலத்துக் கிரந்த எழுத்தில் உள்ளதனால் அதன் காலம் ஞானசம்பந்தர் வாழ்ந்த காலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தே உருத்திராச் சாரியார் என்னும் வடவர் ஒருவர் தமிழ்நாடு போந்து அப்போது நிலவிய இசையைப் பயின்று தன்பால் வந்த பலருக்கு இசையறிவு கொளுத்தி மேம்பட்டார். அவரிடத்தே பயின்ற பல்லவ அரச குமரனொருவன் இந்த இசைக்கல் வெட்டை இங்கே ஏற்படுத்தியுள்ளான். அவன் பெயர் தெரிந்திலது ; ஆயினும், அவன் பல்லவ வேந்தனான முதன் மகேந்திரவன்மனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்


  1. ஞானசம் 286 : 3
  2. ஞானசம், 335:5
  3. ஷ. 334 : 4.
  4. ஷ 176:4
  5. A. R for 1905. para. 4