பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

95

 திருப்பதிகங்களைப் பாடினார் என்பது, "கந்தண் பூங்காழி யூரன் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞான சம்பந்தன்"[1] என்ற திருக்கடைக் காப்புப் பாடலொன்றால் தெள்ளிதிற் பெறப்படும்"[2] என்று கூறுகின்றனர். இக் கூற்றால் இத் திருப்பாட்டுக்கள் இயற்றமிழ் நெறியில் கொச்சக ஒருபோகு வகையில் அடங்கும் என்பது பெறப்படும்.

இனி, இவை இசைத்தமிழ் ഖகையில் எவ்வகையின் பாற்படும் எனத் தெளியவுணர்தற்கு வேண்டும் இசைத் தமிழ் நூல்கள் முழுவடிவில் ஒன்றும் இன்று நாம் கிடைக்கப்பெற்றிலோம். ஆயினும், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் உரையில் அடியார்க்கு நல்லார் முதலியோர்களால் காட்டப்படும் இசைத் தமிழ்நூல் மேற்கோள்களைத் துணையாகக் கொண்டு நோக்குமிடத்து, முதனடை, வாரம், கூடை, திரள் எனக் காணப்படும் இசையியக்கம் நான்கனுள் ஒன்றாகிய வாரத்தின் பால் இப்பாட்டுக்களை அடக்கலாம். தெய்வஞ் சுட்டிவரும் வாரப்பாட்டுத் தேவாரமாகும். திருஞானசம்பந்தர் முதலியோர் பாடியருளிய பாட்டுக்களையும் தேவாரமென வழங்கும் வழக்கம் நம்நாட்டில் பயில வழங்குவதொன்று. இவ்வாற்றால் ஞானசம்பந்தர் பாடிய பாட்டுக்கள் இசை வகையில் தெய்வஞ் சுட்டிய வாரப்பாட்டு என்பது தெளிவாம், "வாரமென்பது வகுக்குங்காலை, நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கித், தொடையமைந்து ஒழுகும் தொன்மைத்து என்ப" எனச் சிலப்பதிகார அரும் பதவுரைகாரர் காட்டும் இசைத்தமிழ்ப் பழஞ் சூத்திரமொன்று வாரத்தின் இயல்பை விளக்கி நிற்பது ஈண்டு நோக்கத்தக்கது.

இவ்வாறு இயலும் இசையுமாகிய இருவகைக்கும் ஒத்த நெறியில் பல ஆயிரக்கணக்கில் ஞானசம்பந்தர் முதலியோர் பாடிக் காட்டிய பாட்டுக்கள் பிற்காலத் தமிழ்ப்


  1. ஞானசம். 148 : 11
  2. A thesis on மூவர் தேவாரம் by Vidvan K. VellaiVaranar under the auspices of the Annamalai Univesity in the year 1935-37