பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சைவ இலக்கியவரலாறு


பாவலர்கட்குச் சீரிய வழிகாட்டியாய் அமைந்தன. பின் வந்த சீவக சிந்தாமணி முதலிய சமண சமயப் பெருநூல்களும், பெரிய புராணம் முதலிய சைவ சமயப் பெருநூல்களும்' நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்' கம்ப ராமாயணம் முதலிய வைணவ சமயப் பெருநூல்களும் இக்காட்டிய பாட்டுக்களையே நெறியாகக் கொண்டு இயலுவனவாயின. இடைக்காலத்தே, பண்டைய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொடர்நிலைச் செய்யுட்கெனக் கொண்ட ஆசிரியப்பா வீழ்ந்து போயிற்று. பிரபந்தங்கள் எனப்படும் சிறு நூல்களிலும் இலக்கண நூல்களிலும் ஆசிரியப்பா ஒதுக்குண்டு கிடப்பதாயிற்று. ஆயினும் இடைக்காலத்துப் புலவர்களுள் ஒருவரான கொங்குவேளிர் மாத்திரம் தாம் எழுதிய பெருங்கதை யென்னும் தொடர்நிலைச் செய்யுளை ஆசிரியப்பாவால் ஆக்கியுள்ளார்; ஆயினும் அதன் முதலும் இறுதியும் கிடைத்தில. இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய காந்தி புராணம் என்னும் தொடர்நிலைச் செய்யுளில் இடையிடையே ஆசிரியப்பாக்கள் சில காணப்படுகின்றன. எங்ஙனமாயினும், இன்று தமிழ் இலக்கிய உலகில் பெருகி நிற்கும் பெரு நூல்கள் பலவும் இயன்றிருக்கும் பாட்டுக்களின் பெருகிய தோற்றத்துக்கு அடிகோலிய முதன்மை திருஞானசம்பந்தர்க்கு உரியதென்பது தெளியக் கோடற்பால தொன்று.

அரிய சொல்லாட்சிகள்

இனி, இசைத் தமிழ்ப் பாட்டுக்கள் பலவும், இயல்நெறியினும் இசை நெறியினேயே பெரிதும் மேற்கொண்டு இயலுவனவாகும். ஆதலால், இசைக்கேற்பச் சொற்கள் உரு வேறுபடுவது இயற்கை. அவ்வகையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள பாட்டுக்களில் இயற்றமிழ் நெறியில் காணப்படாத சில சொல்லுருவங்கள் காட்சி தருகின்றன. உண்ணென்னும் வினையடியாக உண்டி, உணவு, உண், ஊண் என்பன முதலிய செயப்படு பொருண்மேனின்ற வினைப் பெயர்கள் பெருக வழங்குதல் உண்டு; உண்பான், உண்டான் என்பன போல வினைமுதன்மேல் நிற்பனவும்