பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{|98|சைவ இலக்கிய வரலாறு|}}

<bபழமொழிக் குறிப்புb/>

இவ்வண்ணம் புது முறையிற் சொற்களை இனிய வகையில் இசைக்கேற்பச் சமைத்துக் கொள்ளும் சதுரப்பாடு சிறந்து விளங்கும் ஞானசம்பந்தர், தம் காலத்தும் தமக்கு முன்னோர் காலத்தும் வழங்கிய பழமொழிகளையும் கருத்துக்களையும் பொன்னே போல் போற்றித் தம்முடைய ஞானப் பாட்டுக்களின் இடையே தொடுத்துச் சிறப்பித்திருக்கின்றார். கருப்பு வெளுப்பாகாது, கசப்பு இனிப் பாகாது என இன்று நாட்டில் நிலவும் பழமொழி பண்டை நாளில் "நீலமுண்டது பிறிது ஆகாது " என வழங்கிற்று : இப் பழமொழிகள் சிலவற்றைத் தொகுத்துப் பழமொழி என்னும் பெயரால் நீதிநூல் செய்த "முன்றுறை யரையர்" என்பார். மூர்க்கன்தான் கொண்டதே கொண்டு விடான் என்பதை விளக்குதற்கு, "ஆகாதே உண்டது நீலம் பிறிது" என்று குறித்தார். இப் பழமொழியை நம் ஞான சம்பந்தர், “சிராப் பள்ளித் தலைவரை நாளும் தலைவரல்லாமை உரைப்பீர்காள் நிலவரை நீலமுண்டதும் வெள்ளே நிறமாமே”2 என்று பாடுகின்றார். இவ்வாறே நினைவு சொல் செயல்களை வேறு செயல்களில் ஈடுபடுத்தாமல் மடிந்து இருப்பவர், "நான் சிவா எனச்சும்மா இருந்தேன்" என்பதை உலகியலில் இன்றும் காணலாம். இது ஞான சம்பந்தர் காலத்தும் நிலவியிருந்தது என்பதை, "நண் பால் சிவாய எனா நாலூர் மயானத்தே, இன்பாயிருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே"3 என்று ஞானசம்பந்தர் கூறுவது கொண்டு உணரலாம். மேலும், எழுத்துக்கெல்லாம் அகரம் முதலாதல் போல இறைவன் எல்லாவற்றிற்கும் முதலாக உள்ளான் என்ற கருத்தை “அகர முதலானே”4 என்று குறிக்கின்றார். இது போலும் குறிப்புக்கள் பல இவருடைய திருப்பாட்டுக்களிற் காணப்படுதலின் விரிவஞ்சி விடுக்கின்றோம்.



1. பழமொழி. 94. 2. ஞானசம். 98 : 5. 3. ஞானசம், 182:10, 4. ஞானசம் 88 : 5