பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

99

திருப்பதிகங்களால் நாட்டில் விளைந்த திருத்தம்

ஞானசம்பந்தருடைய பாட்டுக்கள் நாட்டில் பரவப் பரவ, அவரது ஞானவாய்மை உயர்ந்து விளங்குவதாயிற்று. அவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டிலேயே அவரது சைவப் பணி சான்றோர் பரவும் சான்றாண்மையைப் பெற்றது.அப்போது நிலவிய நம்பியாரூரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், “வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா, எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”1 என்று 'பாராட்டியதோடு அமையாது, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” 2 என்பன முதலிய சொற்றொடர்களால் தமது அன்பும் பெருமதிப்பும் தோன்றக் கூறிப் பாராட்டினர். அவர்க்குப் பின்வந்த பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பிகளும் ஞானசம்பந்தரை வியந்து பாடியுள்ளனர். பட்டினத்தடிகள் ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட வரலாற்றை வியந்து தாம் பாடிய திருக்கழுமல மும்மணிக்கோவை முதற் செய்யுளிலேயே குறித்துப் பாராட்டுகின்றார். நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தர் பொருளாகப் பல சிறு நூல்களை இயற்றினார். இவர்கட்குப் பின்வந்த சேக்கிழார் பெருமான் ஞானசம்பந்தர் வரலாற்றை ஆராய்ச்சித் திறனும் அன்பும் சிறக்க இனிய பாட்டுக்களாற் பாடியுள்ளார். பின்வந்த தமிழ்ப் புலவர் அனைவரும் தாம் பாடிய நூல்களில் ஞானசம்பந்தர் முதலிய பெருமக்களை வாழ்த்தி வணங்கி வழிபட்டிருக்கின்றனர். ஞானசம்பந்தரைப் பாராட்டி உரைக்கும் தமிழ் நூல்கள், வெளிவந்தனவும் வெளிவாராதனவுமாக இருநூற்றுப் பதின்மூன்று நூல்கள் என ஆராய்ந்து கணக்கிட்டுச் சீகாழியில் கடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் இந் நூலாசிரியரால் காட்டப்பட்டிருக்கிறது. இடைக் காலச் சைவர்கள், ஞானசம்பந்தர் முதலிய நான்கு பெரு மக்களையும் சமய குரவர்கள் எனவும், அவர்கள் வழங்கிய திருப்பதிகங்களைத் தமிழ் மறை எனவும், அவருள் ஞான-



1. சுந் 39 : 5. 2,சுந்