பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

105

ஒருபால் நாடாளும் வேந்தர்களுக்கும் ஒருபால் நாட்டு மக்கட்கும் இடை நின்று இரு திறத்தாரிடையும் அன்பும் ஒத்துழைப்பும் ஒப்ப நிலவுமாறுசெய்தன[1]. இத்தகைய அரிய பணிகளைச் செய்தற்குரிய கோயில்களின் நெறியறிந்து செயல் புரியும் கோயிற் பெருமக்கள் சமயப்பற்றும் சமய ஒழுக்கமும் உடையராதல் வேண்டும். அவர்களில் பலர் துறவிகளும் மாகேசுரர்களும் சிவயோகியர்களுமாக இருந்தனர். கோயில்களில் செய்யப்படும் செயல் பலவும் கோயிற் பணிக்குரிய மாகேசுரர்களால் காக்கப்படும் ; ஆதலால் தான், கோயில்களில் விடப்படும் நிவந்தங்களின் இறுதியில் பன்மாகேசுரரஷை என்றொரு தொடர் குறிக்கப்படுகிறது. இந்த மாகேசுரர் முதலியோர் சமய உணர்வும் ஒழுக்கமும் பெறுதல் வேண்டி, அவர்கட்கென நாடெங்கும் மடங்கள் பல தோன்றி உணவும் உடையும் உறையுளும் மருந்தும் உதவிவந்தன. அவ்வாறு தோன்றிய மடங்களுள் மிகப் பழமை வாய்ந்தவை திருஞான சம்பந்தர் பெயரால் தோன்றியன. திருவானைக்காவிலுள்ள சங்கராசாரியார் மடம் முன்னாளில் திருஞான சம்பந்தர் மடமாக இருந்ததென அங்குள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்த அரசியற் கல்வெட்டாராய்ச்சியாளர்[2] கூறுகின்றனர். இவ்வாறே திருஞான சம்பந்தர் பெயரால் மடங்கள் பல தமிழ் நாடெங்கும் இருந்தன என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் எடுத்தோதுகின்றன. ஆயினும் அவற்றுள் பல மூன்றாங் குலோத்துங்கனுடைய இருபத்திரண்டாம் ஆண்டில் உண்டான குகையிடி கலகத்தால்[3] அழிக்கப்பட்டன : மிகச் சிலவே எஞ்சின. பின்னர்ச் சில உண்டாயின என்றாலும் அவை வேறு வேறு பெயரால் தோன்றி நிற்பனவாயின. இப்போது மதுரையிலுள்ள திருஞான




S{W-7-A


  1. 1. A. R. for 1921-2, para. 68-71.
  2. 2. A. R. for 1909. para. 63.
  3. 3. “35& #1719. 3; 30.5ib which happened in the 22nd year of Gustu 1 GH56) # (GG 60 TË Gl:Éissir III) must have been instigated by the Brahmanas against the non-Brahmanical Saiva-Mathas”— A. R. for 1913. para. 42. Vide also A. R. foro 1926-7. p. 84.