பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

117

கேள்வியுற்றார், உடனே, சீர்காழிக்குச் சென்று அவரையும் அங்குள்ள சிவபெருமானையும் கண்டு இன்புறவேண்டும் என்னும் விழைவுமீதுாரப் பெற்றுச் சீர்காழியடைந்து, தன் வரவு கேட்டு வரவேற்ற திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைக்கண்டு பேரின்புற்றார். பின்னர், சீர்காழிப் பரமனை வணங்கி வழிபட்டுத் திருப்பதிகங்கள் பல இசைத்து இன்பம் கொண்டார்.

சில நாட்கள் கழிந்ததும், திருநாவுக்கரசர், இடையிலுள்ள திருப்பதிகளைப் பதிகம்பாடிப் பரவிக்கொண்டே பழையாறை நகரத்து ஒரு கூற்றிலுள்ள திருச்சத்தி முற்றம் அடைந்து இறைவனை வணங்கித் தன் முடிமேல் அவர் திருவடியைச் சூட்டுமாறு வேண்டினார். அப்போது, இறைவன் அவர் கனவில் தோன்றி “நல்லூர்க்கு வா” என்று பணிப்ப, நாவரசர் நல்லூரையடைந்து தான் நயந்த திருவடிப் பேறுபெற்று, அதனால் எய்திய இன்ப மிகுதியால் இனிய திருப்பதிகங்கள் பாடினார்.

அங்கே சிலகாலம் தங்கியிருந்த திருநாவரையர், மேலும் பல திருப்பதிகளைக் கண்டுவழிபட விரும்பித் திருப்பழனம் முதலிய திருப்பதிகளைப் பரவிக்கொண்டு திங்களூர்க்குச் சென்றார். அவ்வூரில் அப்பூதியென்னும் வேதியர் தம்பால் பேரன்பு கொண்டு தம்பெயரையே தன்மக்கட்கும் தான் நிறுவிய தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றிற்கும் இட்டுப்பெருஞ்சிறப்புடன் ஒழுகி வருவதை நாவரசர்கண்டார். அவர்மகன் மூத்த திருநாவுக்கரசு என்பான் அரவு தீண்டப்பட்டு இறந்தானைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்து. அப்பூதியாரையும் தாம்பாடிய திருப்பதிகமொன்றில் சிறப்பித்து அவர்பால் பிரியாவிடை பெற்றுக்கொண்டு திருவாரூர் சென்று சேர்நதார்.

திருவாரூர் அந்நாட்கு முன்பிருந்தே சோழர் தலைநகராய்ச் சிறந்து விளங்கியது. அங்குள்ள சிவபெருமானுக்குத் திருவாதிரை விழா மிக்க சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். திருநாவுக்கரசர் அங்கே பலநாட்கள் தங்கித் திருப்பதிகத்தொண்டும் உழவாரத் திருத்தொண்டும் புரிந்தார். பின்பு, அவர் திருப்புகலூரை யடைந்தாராக, அங்கே