பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சைவ இலக்கிய வரலாறு

வந்திருந்த திருஞானசம்பந்தரைக் கண்டு திருவாரூரில் தாம்கண்ட திருவாதிரை விழாவின் சிறப்பை எடுத்தோதினார். ஞானசம்பந்தர் தாமும் சென்று அவ் விழாவைக்காண விழைந்து திருவாரூருக்குச் சென்றார். நாவரசர் திருப்புகலூர் முருகநாயனார் திருமடத்தில் சிலநாள் தங்கி இருந்து, திருஞானசம்பந்தர் திரும்பி வந்ததும், அவருடன் திருப்பதிகள் பலவற்றை வணங்கிக்கொண்டு திரு வீழிமிழலை யடைந்தார்.

அந்நாளில், நாட்டில் மழை இல்லாமையால் காவிரியும் வறண்டது. உணவு நெருக்கடியான பெருவறம் உண்டாயிற்று. திருவீழிமிழலையில் கூடியிருந்த திருநாவுக்கரசர்க்கும் திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்கும் வீழியிறைவன் நாடோறும் படிக்காசு நல்கினார். அதனால் இருவரும் வறுமை அறியாது இனிதிருந்தனர். பின்னர் மழைபெய்தது; நாடும் நலமுற்றது.

அதன்பின்,இருவரும் திருமறைக்காட்டுக்குச் சென்றனர். அங்கே மறைக்கதவுகளைத் திறத்தலும் மூடுதலுமாகிய நிகழ்ச்சிகள் நடந்தன[1]. அவ்வூரில் தங்கியிருக்கும் நாளில் ஒருநாள் இறைவன் நாவரசர் கனவில்தோன்றித் திருவாய்மூருக்கு வருமாறு பணித்தார். நாவரசர் திருவாய்மூருக்குச் சென்றார். வழியில் இறைவன் பொற்கோயில் ஒன்றைக் காட்டி அதனுட் புக்கு மறைந்தார். அதனால் அவர் இறைவனைக் காணாது அயருங்கால், அவர்திருவாய்மூருக்குச் செல்வது அறிந்து திருஞானசம்பந்தரும் வந்து சேர்ந்தார். நாவரசர் இறைவனை நோக்கித் திருஞானசம்பந்தர் உடனிருப்பதை எடுத்தோதித் தனக்கு இறைவன் திருவுருவைக் காட்டவேண்டுமென வேண்டி ஒரு பதிகம் பாடினார். இறைவன் தன் திருவுருவைக்காட்டியருளவே, நாவுக்கரசர் திருவாய்மூர் இறைவனைப்பாடும் அடியாரொடு கண்டு இன்புற்றுத் திருவாய்மூருக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டுக்கொண்டு திருமறைக் காட்டுக்கே


  1. திருநா. 124 :1, 6