பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 சைவ இலக்கிய வரலாறு

-கள் தங்கினார்; அப்போது அவர் பாடிய திருப்பதிகங்கள் பலவாகும்.

திருக்காளத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசர்க்குத் திருக்கயிலையைக் கண்டு வழிபட வேண்டுமென்னும் ஒரு வேட்கை உள்ளத்தில் உண்டாயிற்று. உடனே கயிலை நோக்கி புறப்பட்டுச் செல்லலுற்றார். மிக்க முதுமையுடையவராயினும், உலையாவுள்ள முடைமையால், வழியருமை கருதாது செல்வாராயினர். அரிய வழிகள் பலவற்றை நடந்து கடக்க வேண்டியிருந்தமையின் நாவரசர்க்கு உடல் வலி குறைந்தது; நடக்கும் நடை தளர்ந்தது: கைகால்கள் தேய்ந்தன . உடலால் தவழ்வதும் செய்தார். உடலுறுப்புக்கள் ஓய்ந்து தேய்ந்தொழியினும், உள்ளம் மட்டில் சிறிதும் தேயாது ஓங்கிநின்றது. அவரது உண்மையன்பின் உறைப் பினைக்கண்ட திருக்கயிலை முதல்வனாகிய சிவபெருமான், வழியிடையே தோன்றி, ஒரு பொய்கையைக் காட்டி அதன் கண் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்க எனப் பணித்தருளினர். அவ்வாறே நாவரசரும் அப்பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் கரையேறித் திருக்கயிலைக் காட்சி கண்டு இன்புற்றார் இறைவன் கயிலையிற்போல ஆணும் பெண்ணும் எவ்வுயிரும் கலந்து நிற்கும் காட்சி நல்கினன். அப்பேற்றை நம் நாவரசர் இனிய திருப்பதிகங்களாற் பாடி மகிழ்ந்தார். பின்பு திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்திக்குச் சென்று திருமட மொன்றைச் சமைத்துக் கொண்டு அங்கே தங்கித் தொண்டுகள் பல செய்து வந்தார். அந்நாளில் தென்னாடு சென்று தென்னவனைச் சைவனாக்கி நாடு முழுதும் சிவம் பெருக்கிப் போந்த திருஞான சம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு வந்தனர். அவரை அன்புடன் வரவேற்ற நாவரசர் அவருடனே திருப்பூந்துருத்தியிற் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கினர். திருஞான சம்பந்தர் நீங்கிய- ______________________________ 1. இப்போது ஒரு திருப்பதிகம் (திருநா. 222) தான் கிடைத் துள்ளது. ஆனால் நாவரசர் கண்ணப்பரைப் பல பதிகங்களிற் குறித்துள்ளனர்.