பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சைவ இலக்கிய வரலாறு

இது கண்டு இவர்க்கு வயது 70 இருக்கலாம் என்பது தமிழ் வரலாறுடையார் கருத்து. சைவசமயம் புகுதற்கும் சீர்காழியில் திருஞானசம்பந்தரைச் சந்திப்பதற்கும் இடையே நிற்கும் முப்பது ஆண்டுகளையும் திருநாவுக்கரசர் திருவதிகையிலேயே கழித்தாரென்பது பொருந்துவதாக இல்லை; ஏனெனில், இறைவன் திருவருளால் சூலைநோயின் நீங்கி இன்புற்றவர், அங்கேயே இருந்தொழியாது வேறு பல திருப்பதிகட்குச் சென்று வணங்கினர் என்றே அவர் வரலாற்றின் போக்கு உணர்த்துகிறது. இனி, ஆராய்ச்சியாளர் சிலர் திருநாவுக்கரசர் சயினசமயம் புகுந்தபோது நாற்பது வயதிருக்கலாமென்பது பொருந்தவில்லை; நூலறிவே பற்றி அதற்கு அடிமையாகி ஒருவர், வேற்றுச் சமயம் புகுதல் முதலிய செயல்களைச் செய்தற்குரிய காலம் முப்பதாண்டுக்குக் குறைந்த பருவமாகும். இவற்றை யெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால், தொடக்கத்தில் யாம் கூறியவாறு கொள்வதே பொருத்தமாதல் தெளியப்படும். இலக்கிய வரலாறெழுதிய பேராசிரியர், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்களும், “கி. பி. 550 முதல் 650 வரையுள்ள காலமே தேவார முதல்வராகிய அப்பர் சம்பந்தர் காலமென்று எளிதில் கொள்ளலாம்”[1] என்று கூறுகின்றார்.

வரலாற்றாராய்ச்சி

திருநாவுக்கரசர் வரலாற்றில், அவர் சமண் சமயத்தை மேற்கொண்டு அச் சமண் சமயச் சான்றோரிடையே பல காலம் தங்கியிருந்தவர் என்பது சிறந்ததொரு நிகழ்ச்சியாகும். பின்னர், அவர், சூலைநோயுற்றுத் திருவதிகை வீரட்டானேச்சுரரைப் பாடி அந்நோயின் நீங்கிச் சிறந்த சிவத்தொண்டராய்த் திருப்பதிகம் பல பாடலுற்றதும்,[2] சமணர் அவரை நீற்றறையில் சிறையிட்டதும்[3], நஞ்சு


  1. இலக்கிய வரலாறு. பக். 335.
  2. திருநா :91 : 3; 100 :1 ; 250 : 1; 310 : 3.
  3. “வெஞ்சொற் சமண் சிறையில் என்னை மீட்டார்” – திருநா. 265 : 8.