பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சைவ இலக்கிய வரலாறு

மிடத்து, திருநாவுக்கரசர்க்குச் "சமண்சமயத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி கழிந்ததே" என்ற உணர்வுதோன்றி மிக்க வருத்தத்தை விளைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால், அவர், தமது சமண் சமய வாழ்வை நினைந்து வருந்தி மிகப்பல பாட்டுக்களைப் பாடியிருப்பதைக் காண் கின்றோம். "ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே"[1] "போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே"[2] "நீதனேன் என்னே நான் நினையாவாறே"[3] என்பன முதலாக முடியும் திருப்பதிகங்கள் பல திருநாவுக்கரசரது வருத்த மிகுதியைச் சுட்டி நிற்கின்றன.

திருப்பதிகங்கள்

திருநாவுக்கரசர் 4900 திருப்பதிகம் பாடினர் என்பர். நம்பியாரூரர், தாம்பாடிய திருப்பதிகம் ஒன்றில், திரு நாவுக்கரசரை, "இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈந்தவன் திருநாவினுக்கரையன்"[4] என்று குறித்துள்ளார்; அவர்க்குப் பிற்போந்த நம்பியாண்டார் நம்பிகளும், "பதிகம் ஏழேழு நூறு பகரும் மாகவியோகி"[5] எனவும் "கசிந்து இதயம் ஏழெழுநூறு அரும்பதிக நிதியே, பொழிந்தருளும் திருநாவின் எங்கள் அரசினையே"[6] எனவும் கூறியுள்ளார். சேக்கிழாரும், "உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழெழுநூறும்" என்று, நம்பியாரூரர் குறித்த குறிப்பையே எடுத்தோதக் காண்கின்றோம். இவ்வகையால் திருநாவுக்கரசர் 4900 திருப்பதி கங்களேப் பாடியருளினாரென்று அறியலாம். திருமுறைகண்ட புராணமுடையாரும், 'கொடுங்கூற்றாயின என்ன எடுத்துக் கோதில், ஒருமானைத் தரிக்கு மொரு வரையுங்காறும் ஒரு நாற்பத்தொன்பதினாயிரமதாக"[7] என்று கூறியிருக்கின்றார். இப்போது பண்முறையில் நூற்றுப்பதி


  1. திரு நா. 217
  2. ஷை.268
  3. ஷை 225
  4. சுந் தேவா. 65 :2.
  5. திரு நா. ஏகாதச. 7.
  6. ஷை ஷை .3.
  7. திருமுறைகண். பு. 15.