பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சைவ இலக்கிய வரலாறு

காடு சென்று தவஞ் செய்வது, அடியார் வேடம்பூண்டு கூட்டமாய்த் தனித்திருந்து ஒழுகுவது, பட்டினி கிடப்பது முதலியனவும் பலரிடத்தில் காணப்பட்டன. ஆயினும் அவருள் பெரும்பாலாரிடத்தில் இறைவன்பால் உண்மையன்பும், ஏனை உயிர்கள்பால் சிறந்த அருளும் காணப்படவில்லை; உண்மையன்பும் அருளறமும் இல்லாதார் இன்னோரன்னவற்றைச் செய்வதால் எள்ளளவும் பயனில்லை என்பது நாவரசரின் ஞானக் கருத்தாகும். இதனைப்பாவநாசக் குறுந்தொகையில்[1] எத்தவத்தைச் செய்யினும் எவ் வொழுக்கத்தில் நிற்பினும், அவரவரும் எங்கும் சிவமாய்த்திகழும் இறைவனது இறைமைத் தன்மையைப் பற்றிய திண்ணிய உணர்வு உடையராதல் வேண்டுமென அவர் பெரிதும் விதந்து கூறியுள்ளார்.

நம் திருநாவுக்கரசர், இனிய இசைவல்ல செந்தமிழ்ப் பெரு நாவலராதலால், அதற்கேற்ப, எண்ணும் எழுத்துமாகிய இரண்டனுடன் இசையையும் கூட்டி, "எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி இசையவன் காண்"[2] என்று பாராட்டி மகிழ்கின்றார். இவ்வாறே திருஞான சம்பந்தர், "எண்ணும் ஓர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார், கண்ணும் முதலாய கடவுள்"[3] என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது.

இறைவனது திருவடியைச் சிறப்பித்து இவர் பாடியது போல இவர்க்கு முன்னும் பின்னும் தோன்றி நிலவிய சான்றோருள் எவரும் பாடியதே இலர். கட்டளையுடைய பாட்டுக்களான திருவிருத்தமும் திருத்தாண்டகமும் இவர்க்கென்றே அமைந்த இனிய பாவினங்களாகவுள்ளன. திருவிருத்தத்தினும் திருத்தாண்டகம் அரிய கட்டளை அமைந்தது. ஆயினும், இவர், இத் திருத்தாண்டகங்களை மிக்க எளியவாகப் பாடியிருப்பது இவரது திருப்பெயர்க்குப் பொருத்தமாக இலங்குகிறது. திருமுறை கண்ட காலத்திருந்த சான்றோர், இத் திருத்தாண்டகங்களை


  1. திரு.நா. 213: 1-10.
  2. திரு நா. 262 : 7.
  3. திருஞான. 170: 4.