பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

137

யெல்லாம் ஒரு சேரத் தொகுத்து ஒரு திருமுறையாக வகுத்திருப்பது ஒன்றே இவரது திருத்தாண்டக மாண்பை வற்புறுத்துவதாகும். இது பற்றியே பின்வந்த சான்றோர் பலரும் திருநாவுக்கரசரைத் தாண்டக வேந்தர் என்றும் தாண்டகச் சதுரர் என்றும் சிறப்பித்துப் பாராட்டினர். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கின மூன்றாங் குலோத்துங்கனது இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் திருக்குறுக்கையில் உண்டாகிய கல்வெட்டொன்று,[1] அவ்வூர்த் திருக்கோயிலில் திருகாவுக்கரசரது திருத்தாண்டகத்தை ஒதுதற் கென்றே நிவந்தம் விட்ட செய்தியைக் குறிக்கின்றது.

இறைவன் திருவடிக்கு அன்பு பூண்டு தொண்டராகிய பெருமக்களது உட்கோள் இன்னது எனக் கூறுவாராய், தமது மனக்கோளும் அதுவே யென்பதுபடப் பல திருப் பாட்டுக்களைப் பாடியிருக்கின்றார். இறைவனாகிய சிவ பெருமான், “தீதாய் வந்த நஞ்சு அமுது செய்து, அமுதம் உண்ட அமரர் உலந்தாலும் உலவாது”[2] நின்று அருள் செய்பவனாதலால், அவனுக்குத் தொண்டுபட்ட அடியார் அஞ்ச வேண்டியதில்லை; அவர்கள் வானம் துளங்கினும் மண் கம்பமாயினும், மலைகள் தானம் துளங்கித் தலைதடு மாறினும், தண்கடற்கண் மீனம்படினும் ஒரு சிறிதும் அஞ்சார்.[3] “அப்பனார் உளர் அஞ்சுவதுஎன்னுக்கே”[4] என்பது அவரது உட்கோள். அடியவர் சிந்தைக்கண், இறைவன் சிவமாய்[5] நீங்காது உறைதலால், அவர்கட்குக் கூற்றமும் தீங்கு செய்யாது;[6] வினைகளும் தொடர்ந்து துன்பம் செய்யா;[7] அவர்பால் பரிவும் இடுக்கணும்[8] உளவாகா; எங்கெழில் என் ஞாயிறு எமக்கு[9] என இறுமாந்திருப்பது [10] அவரது இயல்பு. சுருங்கச் சொல்லின், முடிசூடிய


  1. A. R. No. 219 of 1917.
  2. திருநா. 264 : 5.
  3. திருநா.. 113 : 8.
  4. ௸ 191 : 6.
  5. ௸ 162 : 5.
  6. ௸ 309 : 2.
  7. ௸ 115 : 4.
  8. ௸ 309 : 2.
  9. ௸ 309 : 2.
  10. ௸ 9 : 11 .