பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சைவ இலக்கிய வரலாறு

ராய், நம் திருநாவுக்கரசர், "புத்தன் மறவாது ஓடிஎறி சல்லி புதுமலர்களாக்கினான்"[1] என்றும், சாக்கியராய்க் கஞ்சியுண்டு வாழ்ந்த இவர்க்கு இறைவன் நீள்விசும்பாளும் பேரருள் நல்கினான் என்பார், "கல்லினால் எறிந்து கஞ்சிதாம் உணும் சாக்கியனார், நெல்லினால் சோறுணாமே நீள்விசும்பு ஆள வைத்தார்”[2] என்றும் பாராட்டிக் கூறுகின்றார்,

4. கண்ணப்பர்.

கண்ணப்பர் வரலாறு நாடறிந்ததொன்று. திருநாவுக் கரசர், இவரது வரலாற்றைத் திருக்குறுக்கை, திருச்சாய்க்காடு முதலிய திருப்பதிகங்களில் சிறிது விரியக்கூறி, திரு மழபாடித் திருப்பதிகத்தில், "கண்ணப்பர்க்கு அருள் செய்த காளேகண்டாய்"[3] என்றும், திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகத்தில் "கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார்"[4] என்றும் குறித்துரைக்கின்றார். சம்புவராய மன்னர் ஆட்சிக்காலத்தில் வேட்டுவர் சிலர், தாம் திருக் கண்ணப்பர்வழிவந்தவரெனக் கூறிக்கொண்டு சம்புவராய மன்னர்க்கு நன்றாக வேண்டி இறைவனுக்கு நிவந்தம்விட்டதாக வன்பார்த்தான் பனங்காட்டூர்க் கல்வெட்டொன்று[5] கூறுகிறது. கண்ணப்பர் வரலாற்றை வியந்து நக்கீர தேவர் பாடியனவும் உண்டு ; அவை பதினோராந்திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ளன.

5. கணம்புல்லர்.

இவரது இயற்பெயர் புல்லன் என்பது. கணம் புல்லை விற்று. அதனால் வரும் பொருள் கொண்டு இறைவன் திருக்கோயிலில் விளக்கெரிக்கும் திருப்பணியைச் செய்ததுபற்றி, இவர் கணம் புல்லர் ஆயினர் என்பர். திருநாவுக்கரசர், இவருடைய குணநலங்களைப் பாராட்டி, "எண்ணிறந்த குணத்தினாலே கணம் புல்லன்


  1. திருநா. 266:8.
  2. திருநா. 49 : 6.
  3. ௸ 263 : 9.
  4. ௸ 226 : 6.
  5. A.R. No. 247 of 1906.