பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

திருநாவுக்கரசர்


குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டம் "1என்று குறிக்கின்றார், குமரி தீர்த்தத்தைக் குறிக்கும் போதெல்லாம், நம் திருநாவுக்கரசர், "கொங்கு தண் குமரித்துறை"2 எனவும், "குருகாவூர் வெள்ளிடை குமரி கொங்கு"3 எனவும் குறிக்கின்றார், குமரியை முன்னும் பின்னுமாய்ச் சிறப்பித்துநிற்கும் கொங்கு என்னும் சொல் குறிக்கும் பொருள் தெளிவாகவில்லை. தென்குமரிக்கரையில் இருக்கும் ஊர்க்கு அதுபெயராகலாம் என அறிஞர் கருதுகின்றனர். கன்னியாகுமரியிலுள்ள கல்வெட்டுக்களுள் இப்போது கிடைப்பன எவையும் அவ்வாறு குறிக்கவில்லை. மற்று, குமரிக்கோயில் இடைக்காலத்தே திருப்பணி செய்யப் பெற்றபோது பழையவாயிருந்த கல்வெட்டுக்கள் பல அழிந்துபோயின என்பது தெளிய விளங்குவதனால்,4 இப் போது கிடைக்கும் கல்வெட்டுக்களில் இது பற்றிய குறிப்பொன்றும் காணப்படாமை கொண்டு ஒரு முடிபிற்கும் வருதற்கில்லை. குமரிப்பகுதியைச் சேர்ந்த நாகர்கோயிலில் உள்ள திருக்கோயிலில் <bகொங்கன் விளக்குb/> என்றொரு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதனைப்பற்றி ஆராய்கையில் ஒருகாலத்தே குமரிப்பகுதியில் கொங்கரென்ற தலைவர் வாழ்ந்தனரென்பது தெரிகிறது. அவரது தலைமையில் இருந்தமை பற்றிக் குமரி, கொங்கு தண்குமரி எனப்படுகிறது என்றற்கு இடமுண்டாகிறது. வேறு சிலர் கொங்கு நாட்டில் குமரியெனப் பெயரியதொரு தீர்த்தமிருக்கலாம்; அதனையும் உடன்கூட்டி,5 "கொங்கு தண் குமரி " என்று திருநாவுக்கரசர் வழங்கியிருக்கலாம் எனக் கருதுவர். கொங்குநாட்டுப் பேரூர்த் திருவான்பட்டியுடைய இறைவனையும் குறிக்கின்றாராதலின், கொங்கிற்குமரியும் அவர் அறிந்திருக்கலாம் என்பர். இவ்வாறு குறிக்கத்தக்க சிறப்புடைய குமரிதீர்த்தம் என ஒன்று கொங்குநாட்டில்- ______________________________

 1. திருநா 289 :10. 
.2  திருநா. 213 : 2.
 3.     ஷ  284 : 9. 
 4. Travancore Archaeological 
    Series Vol.III(1931)p.90.
 5. திருநா. 221 - 10.

SIV–Il