பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

திருநாவுக்கரசர்



தாங்கிச் சிறப்பெய்தி யிருந்தமை தெளிவாகிறது. இவ்வாறே அரசியல் தலைவர் பலர் திருநாவுக்கரசர் திருப்பெயர் தாங்கியிருந்தனர். சயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் குன்றங்கிழான் திரு நாவுக்கரைசு தேவன்'1என்றும், "அம்பலவாணன் திரு விசலூரானான திருநாவுக்கரையன்"2 என்றும், கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்துத் திருவடகுடி மகா தேவர் தானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையன்3 என்றும் வருவன போதிய சான்று பகர்வனவாம்.

இனி, திருநாவுக்கரசர்க்கு இளமைப் போதில் அவருடைய பெற்றோர் இட்ட பெயர் மருணீக்கி எனத் திருத்தொண்டர் புராணம்4 கூறுகிறது. மருணீக்கி, இருணீக்கி யென்பன போன்றபெயர்களை மக்கட்கு இடும்வழக்கு முன்னாளில் இருந்ததென்றற்குத் திருவதிகைக்கோயில் வாகீசன்மடத்துக்குநிலம் விடும்கல்வெட்டொன்றில்5 கையெழுத்திட்ட சான்றோர்களுள், இருணீக்கி கோன் என்றொருவர் கையெழுத்திட்டிருப்பது சீர்த்த சான்றாக விளங்குகிறது. -

திருநாவுக்கரசர் என்னும் தூய தமிழ்ப் பெயரை வட மொழிப்படுத்தி வாகீசர் என வழங்குவதும் உண்டு. நாவரசர் முன்னைப் பிறவியில் வாகீசரென்ற முனிவராய் விளங்கினரென்றும், எனவே, வாகீசரெனவும் அவர்க்குப் பெயருண்டென்றும் திருத்தொண்டர் புராணத்தால் அறிகின்றோம். அதனால் திருநாவுக்கரசரைச் சில கல்வெட்டுக்கள் வாகீசரென்று குறிக்கின்றன. திருக்காளத்திப் பகுதியிலுள்ள தொண்டைமானுற்றுாரில் கி. பி. பத்தாம் நூற்றாண்டில் விளங்கிய பராந்தக சோழ வேந்தனுடைய கல்வெட்டொன்று6 பள்ளிப்படை வாகீசுரப்படாரர் என்று- ______________________________ l, A. R. 95 of 1914. 2, A. R. 133 of 1925. 3. S. I. I. Vol.VIII. No. 675, 4. பெரியபுராணம் திருநா. 18. 5. S. I, I, Vol.VIII. No.324. 6 S. I, I, Vol.VIII. No. 529.