பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

சைவ இலக்கிய வரலாறு

ஒருவர் உண்டெனக் கூறுகிறது. அதனை வற்புறுத்துவது போலத் திருவதிகையிலுள்ள கல்வெட்டொன்று திருநாவுக்கரசர் திருமடத்தை வாகீசன்மடம்[1] என வழங்குகிறது.

இனி, திருநாவுக்கரசர், திருக்கயிலை செல்லும் முயற்சியில் ஈடுபட்டு உடல் தேய்ந்து ஒய்ந்து போன காலத்தில், தமக்குக் காட்டியருளப்பெற்ற நீர் நிலையில் மூழ்கித் திருவையாற்றில் குளித்தெழுந்த கோலத்தோடே சென்று இறைவன் திருக்கயிலைக் காட்சி நல்கப்பெற்ற வரலாறு பண்டை நாளை நன்மக்கட்குப் பெரும் வியப்பினை விளைத்தது. அதனல், அவர்கள் அவரைக் குளித்தெழுந்த நாயனார் என்றும் வழங்கினர். அவர் திருப்புகலூர் வந்து அடைந்த போதும் அக்கோலத்தோடே யிருந்த மையின், அவ்வூரவர் அவரைக் குளித்தெழுந்த நாயனார் என்றே வழங்கி வந்தனர். திருப்புகலூரில் அவர் இறைவன் திருவடியடைந்த பின் அவர்க்குக் கோயிலெடுத்து அதனைக் குளித்தெழுந்த நாயனார் கோயில் என்று குலவிய அன்புடன் கூறலுற்றனர். மேலும், நம் சோழ மன்னனை இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் திருப்புகலூரிலுள்ள "குளிச்செழுந்த நாயனர்" கோயிலுக்கு உரிய நிலங்கள் சிலவற்றைத் தோட்டக் குடியான இராசேந்திர சோழநல்லூர் ஊரவையினர் இறையிலியாக்கிய செய்தியைத் திருப்புகலுார்க் கல்வெட்டுக்[2] கூறுவது கொண்டு இவ்வுண்மை துணியப்படுகிறது.

இனி, தெள்ளாறெறிந்த நந்திவன்மன் முதலிய பல்லவ மன்னர் காலத்தேயே திருநாவுக்கரசர் முதலியோர் அருளிய திருப்பதிகங்களைக் கோயில்களில் ஓதும் மரபு இருந்து வந்ததாயினும், முதல் இராசராச சோழ தேவர்கால முதலே திருநாவுக்கரசர் திருவுருவத்தைக் கோயில்களில் எழுந்தருள்வித்து நாடோறும் பூசனையும் ஆண்டுதோறும் பெருவிழாவும் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. முதல் இராசராசன் காலத்திலும் அவன் மகன் இரா-


  1. Ibid. No. 324.
  2. A.R. No 86 of.1928