பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐயடிகள் காடவர்கோன் 185

வழங்குகிறது. இதற்கருகே காவிரியின் தென்கரையி லுள்ள கோயில் கடம்பந்துறை யென்பது. இக்கடம்பந்துறையைத் திருநாவுக்கரசரும்1 பாடியுள்ளார். இக் கடம்பந்துறையை யுடையவூர் குழித்தண்டலையாதலின், ஐயடி கள், கடம்பந்துறையென்னாது குழித்தண்டலையெனக் கூறினராதல் வேண்டும். "மயிலைத் திருப்புன்னையங் கானல்" என்பது திருமயிலையில் புன்னையங் கானலிடத்துக் காபாலீச்சுரமாகும். திருஞானசம்பந்தரும் இம் மயிலையை மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை 2" என்று பாராட்டிப் பாடியுள்ளார். வளைகுளம் என்பது இப்போது வளர்புரமென வழங்குகிறது : திருத்தணிகைக்குக் கிழக்கில் மூன்று கல் அளவில் உளது. இதனைக் கல் வெட்டுக்கள், "சயங்கொண்ட சோழமண்டலத்துமேலூர்க் கோட்டத்து மேலூர்நாட்டு வளைகுளமான பட்டர்சுரவல்லி சங்கிராம ராமசதுர்வேதி மங்கலம் "என்றும், இங்குள்ள சிவன் கோயிலை நாகீச்சுரமென்றும் 3கூறுகின்றன. திருவாப்பாடி திருவாய்ப்பாடி யெனவழங்குகிறது. இவ்வூர் மண்ணியாற்றின் தென்கரையில் இருப்பதாகத் திருநாவுக்கரசர்4 கூறுவர். அது கொள்ளிடத்தின் கிளையாதல் பற்றி, கொள்ளிடத்தின் தென் திருவாப்பர்டி'5என்று ஐயடிகள் ஓதுகின்றார். திருப்பனந்தாள் திருக்கோயிலை, அடிகள் " திருப்பனந்தாள் தாடகையவீச்சரம்" 6என்பர் : இவ்வாறே திருஞானசம்பந்தரும் :தண்பொழில் சூழ் பனந்தாள் திருத்தாடகையீச்சரமே"7 என்று சிறப்பித்துள்ளார். கச்சிமயானமென்றும், நாலூர் மயானமென்றும், திருக்கடவூர் மயானமென்றும் மூன்று மயானங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள், ஐயடிகள் குறிக்கும் திரு மயானம் இன்னது என வரைந்து கூறற்கு இல்லை : ______________________________

1. திருநா. 132.
2. திருஞானசம். 383.
3. A. R. No. 26 of 1911.
4."மந்தமாம் பொழில்கள் 
 சூழ்ந்த மண்ணித் தென்கரை
 மேல் மன்னி, அந்தமோடளவிலாத அடிகள் 
 ஆப்படியாரே - 48 : 5. ;

5. க்ஷேத்தி. 19. 6. ஷ 21. 7 . திருஞான. 320.