பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

நம்பியாரூரர்


அம்பலவாணனைப் பன்னாளும் பணிந்து வந்தார். வருகையில் ஒருநாள் "திருவாரூர்க்கு வருக" என்று ஒரு திருவருட் குறிப்பு அவருக்குத் தோன்ற, உடனே திருவாரூர் நோக்கிச் செல்வார் கொள்ளிடம் கடந்து சீர்காழிப் பதி தோன்றக் கண்டார்.

திருஞான சம்பந்தர் தோன்றித் திருவருள் ஞானம் பெற்றுச் சிறப்பெய்திய சீர்த்தியுடையதென்பது பற்றிச் சீர்காழிப் பதியை மிதித்தற்கு அவரது உள்ளம் அஞ்சிற்று. அதனால், ஆரூரர், அதன் எல்லைப் புறத்தை வணங்கி வலம் வருகையில் எதிரே இறைவன் அவர்க்குத் திருத்தினை நகரிற் காட்டிய திருக்கோலக் காட்சியை நல்கியருளினர். அதுகண்டு பேரின்பம் உற்றவர் சீர்காழிக்குட் சென்று திருக்கோயிலில் இறைவனைத் திருப்பதிகம்பாடிச் சிறப்பித்தார். பின்பு திருக்கோலக்கா, திருப்புன்கூர், மயிலாடுதுறை, அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய திருப்பதி களை வணங்கிச் சென்ற நம்பியாரூரர் திருவாரூரரை நெருங்குதலும், அவ்வூரவர் அவரை எதிர் கொண்டு அழைத்துச் சிறப்புப் பல செய்து வரவேற்றனர். நேரே இறைவன் திருக்கோயிற்குச் செல்பவர் தெருவிலேயே "எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர்" 1என முடியும் பாட்டுக்களைக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடினர். அங்கே அவர் திருக்கோயிலுக்குட் சென்று இறைவனைப் பரவி நிற்கையில் "யாம் உமக்குத் தோழரானோம்; இனி நீர் மணக்கோலத்தோடே இருக்க" என்று ஒரு திருவாக்குப் பிறந்தது. கேட்டார் அனைவரும் பெருவியப்புற்று நம்பியாரூரரைத் தம்பிரான் தோழர் என்ற பெயர் சூட்டிச் சிறப்பித்தார்கள். நம்பியாரூரர் திருவாரூரிலே தங்கி இறைவனைத் திருப்பதிகம் பாடி வழி பட்டு வருவாராயினர்.

இவ்வாறு வரும் நாளில், அவ்வூரில் வாழ்ந்த பரவையார் என்ற நங்கையொருவரைக் கண்டார் : அந்நங்கையாரும் இவரைக் கண்டார். இருவர்கருத்தும் காதலால் ஒன்றின. ______________________________ 1 சுந்தரர் தேவா. 73