பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

சைவ இலக்கிய வரலாறு

வருகையில் வேதியரொருவர் கண்பட, அவரை முதுகுன்றுக்கு வழிகாட்டுமாறு நம்பியாரூரர் கேட்டார்; அவர் கூடலேயாற்றுார் செல்லும் வழியைக் காட்டி மறைந்தார். அதுவும் இறைவன் திருவருட்செயலே எனத் தெளிந்த ஆரூரர், "வடிவுடை மழுவேந்தி"[1] என்ற திருப்பதிகத்தால், "அந்தணன் வழிப்போந்த அதிசயம் அறியேனே" என்று பாடிப் பணிந்து கூடலேயாற்றுார்ப் பெருமானைக் கும்பிட்டு மகிழ்ச்சி கூர்ந்தார்.

திருமுதுகுன்றம் சென்று சேர்ந்த நம்பியாரூரர், அங்கே சின்னாள் தங்கியிருந்தாராக, அப்போது அவர்க்குப் பொன் வேண்டுவதாயிற்று. அதனால் அவர் இறைவனே வழிபடவும் பன்னிராயிரம் பொன் கிடைத்தது. அது பெற்றுப் மெருமகிழ்வு கொண்டு இன்புறும் ஆரூரர், இறை வன் பேரருளைப் பேணி நினைந்து, திருவருட் குறிப்பின்படி அதனே அங்கே ஒடும் மணிமுத்தாற்றில் எறிந்து விட்டுத் தில்லேச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டே திருவாரூர் வந்து சேர்ந்தார்.

அங்கே பரவையார் மனையில் இருந்து வரும் நாளில் ஆரூரர்க்குத் தாம் மணிமுத்தாற்றில் இறைவன் அருளிய பொன்னை இட்டதும், அதனைத் திருவாரூர்த் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு இறைவன் அருளிய குறிப்பும் நினைவு கூர்ந்து பரவையார்க்குத் தெரிவித்தார். ஆற்றிற் கெடுத்துக் குளத்தில் தேடுவார் யாரும் இல்லை என்ற குறிப்புத் தோன்றப் பரவையார் முறுவலித்தார். அது பொறாத நம்பியாரூரர் முதுகுன்றவாணரை நினைந்து திருப்பதிகம் பாடிக் கொண்டே பொன்னைத் தேடலுற்றார், எட்டுத் திருப்பாட்டுக்கள் முடிந்தது பொன்னும் அகப்படுவதாயிற்று. பாட்டும் முடிந்தது; முத்தாற்றில் எறிந்த பொன் முற்றும் கை வந்தது.

நம்பியாரூரர், ஒருகால் திருக்கடவூர் திருநள்ளாறு முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சீர்காழி திருக்கோலக்கா முதலிய திருப்பதிகளின் வழியாகத்


  1. 1. சுங், தே. 85.