பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சைவ இலக்கிய வரலாறு

கொள்ளுமாறு பணித்தருள, அவர் தம் உடன்பாடு தெரிவித்து, "ஆரூரர்க்குத் திருவாரூரில் விருப்பம் மிக வுண்டே" என முறையிட்டார். இறைவன் நம்பியாரூரர் கனவில் தோன்றி, " சங்கிலியை மணத்தல் வேண்டின் பிரியேன் என்று ஒரு சூள் செய்து தரல் வேண்டும்" என இசைப்ப, அவர், "அங்ஙணமே செய்வேன்; அப்போது தேவரீர் திருக்கோயிலினீங்கி மகிழ மரத்தடியில் இருத்தல் வேண்டும்" என்றார்.

மறுநாள் சங்கிலியார், தோழியர் சூழத் திருவொற்றியூர் இறைவனை வணங்க வந்தபோது, நம்பியாரூரர் தம் கருத்தைத் தெரிவித்து அவரது உடன்பாட்டையும் பெற்று, இறைவன் திருமுன்னர் நின்று பிரியாச்சூள் செய்து தருவதாக அவரை அழைத்தலும், அருகில் நின்ற தோழியர், இறைவன் திருமுன்னர்ச் செய்தல் கூடாது ; புறத்தே நிற்கும் மகிழின்கீழ்ச் செய்வதே முறையாகும்" என்றனர்: வேறு ஒன்றும் செய்தற்கில்லாமையால் ஆரூரர் அவ்வண்ணமே செய்தார். திருமணம் சிறப்புற நடைபெற்றது. ஆரூரர் திருவொற்றியூரில் சங்கிலியார் மனையில் பன்னாள் தங்கியிருந்தார்.

இருந்து வருகையில், வேனிற்காலம் வந்தது. வேனில் விழாவில் திருவாரூர் இறைவனது திருவோலக்கச் சிறப்பும் நங்கை பரவையாருடைய ஆடல்பாடல்களின் சிறப்பும் ஆரூரர் நினைவில் தோன்றி அவரைத் திருவாரூர்க்குச் செல்லுமாறு தூண்டின : சங்கிலியார்க்குச் செய்து தந்த சூளுறவை மறந்தார். "பத்திமையும் அடிமையையும் "[1] எனத் தொடங்கும் திருப்பதிகத்தை இறைவன் திரு முன்னர் நின்று பாடிப் பரவித் திருவொற்றியூர் எல்லையை நீங்கினார். உடனே அவருடைய கண்கள் இரண்டும் மறைந்தன. பெரு வருத்தம் எய்திய ஆரூரர், "இது சங்கிலியார் காரணமாக உண்டாயது " என உணர்ந்தார் ; ஆயினும், "அழுக்கு மெய்கொடு”[2] என்ற திருப்பதிகம் பாடிப் பரவிக்கொண்டே திருவாரூர் நோக்கி வருவாராயினர்.


  1. 1. சுந். தே. 51.
  2. 2. சுந், தே. 54.