பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

சைவ இலக்கிய வரலாறு


திருப்பதிகங்களால் வலியுறுகின்றது. நம்பி ஆரூரருடைய தந்தை பெயர் சடையனார் எனவும், தாய் பெயர் இசைஞானியார் எனவும் வரலாறு கொண்டு அறிகின்றோம் : அவற்றை அவருடைய திருப்பதிகம், "சடையன் இசை ஞானி காதலன் திருநாவலூர்க்கோன் அன்னவனும் ஆரூரன்"[1] என்று கூறுகிறது. இந்நிலையில் திருவாரூர்க் கல்வெட்டொன்று, இசைஞானியார் திருவாரூர்க்கு அண்மையிலுள்ள கமலாபுரத்தில் ஆதிசைவருள் கெளதம கோத்திரத்தவரான ஞானசிவாசாரியார் என்பாருடைய மகள்[2] என்று குறிக்கின்றது. இதனால், இசைஞானியார் நம்பியாரூரரைக் கருவுயிர்க்குங்கால் தன் தாய்வீடாகிய கமலாபுரத்தில் இருந்திருக்கலாம் என்றும், திருவாரூர் இறைவன் அவர்கட்கு வழிபடுதெய்வமாதலின், குழந்தைக்கு ஆரூரன் என்ற பெயரிட்டிருக்கலாம் என்றும் கருதலாம். திருவாரூர் இறைவன்பெயரையே பெற்றோர் தனக்கு இட்டிருக்கின்றனர் என்ற கருத்தை விளக்குவது போல, திருவாரூர், "அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன் ஆரூரன்" [3]என்றும் "சீராரும் திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில்வைத்த ஆரூரன்"[4] என்றும் வரும் திருப்பாட்டுக்கள் இசைக்கின்றன.

நம்பியாரூரர் புத்தூரில் திருமணம் தடுக்கப் பெற்றுத் திருவெண்ணெய்நல்லூரில் ஆட்கொள்ளப்பட்டார் என்பது வரலாறு. இதனை ஆளுடையநம்பிகள் தம்முடைய திருப்பதிகங்கள் பலவற்றில் தாமே எடுத்தோதுகின்றார், "அன்று வந்து என அகலிடத்தவர்முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்திலத்திரள் தொத்தினை" [5]என்பது முதலாக உள்ள திருப்பாட்டுக்கள் சான்று பகருகின்றன. திருமணத்தின் போது இறைவன் வேதியர் உருக்கொண்டு


  1. 1. சுந். தே. 39: 11.
  2. 2. S. I. I. Vol. II. part ii. No. 38.
  3. 3. சுந். தே. 59: 11.
  4. 4. சுக். தே. 89: 11.
  5. 5. ௸ 62: 5; 68; 6; 69:8.