பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

சைவ இலக்கிய வரலாறு


போர்வென்ற வெற்றியுடையனாக வேண்டும் மூன்றாவது சுந்தரரால் பாராட்டுப் பெறத்தக்க அத்துணைச் சிவபத்தியுடையனக இக்காடவர்கோன் இருத்தல் வேண்டும் இம் மூன்று கூறுபாடுகளும் பொருந்தியிருப்பவன் மூன்றாம் நந்திவன்மனுவான்; அவன், கி.பி. 840 - 865வரை வேந்தகை இருந்தான் எனச் சொல்லப்படுகின்றான்[1] என்று எடுத்தோதி அவற்றை முறையே விரித்துரைக்கின்றார். அவ்விரிவுரை முற்றும், நம்பியாரூரரோடு சிறிதும் இயைபில்லாத மூன்றாம் நந்திவன்மனது வரலாறு கூறுவதாயும், நம்பியாரூரர் வழங்கிய திருப்பாட்டுக்கட்கு உண்மைப் பொருளறியும் திறமையில்லாததாயும் இருக்கிறது. ஆதலால் அதனையெடுத்தோதி மறுப்பது வேண்டாச் செயலென்று விடுக்கின்றோம்.

இனி, திரு. மீனாட்சி கூறுவனவற்றுள், காடவர்கோன் என்பது பல்லவர்கட்குப் பெயராதலால் கழற்சிங்கன் சுந்தரர் காலத்துப் பல்லவவேந்தன் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததோர் உண்மை. ' கடல் சூழ்ந்தவுலகெல்லாம் காக்கின்ற பெருமான்' என நிகழ்காலத்தாற் கூறப்படுவதே, அக்கழற்சிங்கன் நம்பியாரூரர் காலத்தவன் என்பதை நன்கு வற்புறுத்துகிறது ; ஏனே நாயன்மார் எவரையும் அவர் நிகழ்கால வினையாற் கூருமை மேற்கூறிய கருத்தை வலிமிக்கதாக்குகின்றது. அதனால், கழற் சிங்கன் என்ற பல்லவவேந்தனே இன்னுன் எனத் துணிவதே ஆராய்ச்சியாளர் செய்ய வேண்டுவது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனை தந்திவன்மன் பெயரே, நம்பியாரூரர் பரவும் கோக்கழற் சிங்கன் வேறு என்பதை வெளிப்படுத்துகிறது. இனி, திரு. மீனட்சியவர்கள் விரும்பி விரித்துரைக்கும் தெள்ளாறு எறிந்த நந்தி வன்மனுக்கோ சிங்கன் என்றபெயர் கிடையாது; இதனால் நம்பியாரூரர் தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தவர் அல்லரென்பது விளங்கத் தெரிகிறது.


  1. 1. Dr: C. Minakshi's Administration and Social life under." the Pallavas. p. 299-305.