பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

சைவ இலக்கிய வரலாறு

வழங்குவதும்[1] மேலே எய்திய துணிபை வற்புறுத்துகின்றன. இத்துணையும் கூறியவாற்றால் நம்பியாரூரர், கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டிலும் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்தார் என்பது முடிபாம்.

இவர் காலத்தே திருநாவலூரில் இருந்த சிற்றரசர் நரசிங்க முனையரையன் என்று முன்பே கண்டோம். அந்நாளில் முடிவேந்தர்கள். தம்கீழ் நின்று ஆட்சி புரியும் குறுநிலத்தலைவர்கட்குத் தங்கள் பெயரையே சிறப்பாக வழங்குவது மரபாதலின், அதுவே பற்றி, இரண்டாம் நரசிங்க வன்மன், தன்பெயராலேயே நரசிங்க முனையரையன் என்ற சிறப்பைத் தந்தானக வேண்டும். இவ்வழக்குப் பிற்காலத்தே சோழவேந்தர்பாலும் இருந்திருக்கிறது. இரண்டாம் இராசராசன் காலத்தில் சிறப்புற்றிருந்த மோகன் ஆளப்பிறந்தான் என்னும் தலைவனுக்கு நாலு: திக்கும் வென்ற இராசராசக் காடவராயன்[2] என்று சிறப்பளித்திருப்பது கொண்டு இவ்வுண்மை துணியப்படும். இத் தலைவர்பெற்ற சிறப்பே முடியரசன் பெயரைக் காட்டுவது போல, நரசிங்கமுனையரையர்: பெயரைக் கொண்டே முடியரசனை பல்லவவேந்தன் நரசிங்கவன்மன் என்று தெளிவாய்க் காணலாம்.

நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள்

நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள் சைவத் திருமுறைகளுள் ஏழாந்திருமுறையாக வகுக்கப் பெற்றுள்ளன. இவ்வேழாங் திருமுறையில் இவர் பாடியனவாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன. திருமுறைகண்ட புராணம், இவர் பாடிய திருப்பதிகங்கள் முப்பத்தெண்ணாயிரம் [3]’ என்றும், பண்முறையால் தொகுத்தபோது நூறு திருப்பதிகங்களை கிடைத்தன என்றும் குறிக்கின்றது.[4]


  1. 1. A. R. No. 566 of 1912.
  2. 2. A. R. No. 166 of 1906.
  3. 3. திருமுறை கண்ட புராணம். 16.
  4. 4. ௸ - 25.