பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

209

பத்துப்பாட்டுக்கள் கொண்டதனைப் பதிகம் என வழங்கும் முறைமை கொண்டு நோக்கின், நம்பியாரூரர் பாடியன மூன்று லக்ஷத்து எண்பத் தெண்ணுயிரம் என்றும், பண் வகுக்கப் பெற்ற காலத்தில் ஆயிரம் திருப்பாட்டுக்களே கிடைத்தன என்றும் காண்கின்றோம். ஆனால் சில திருப்பதிகங்களில் பதினோரு திருப்பாட்டுக்களும், சிலவற்றில் பன்னிரண்டு திருப்பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவ்வகையால், நம்பியாரூரர் பாடியன என (நூறு திருப் பதிகங்களும்) 1026 செய்யுட்களும் கிடைக்கப்பெறுகின்றன.

இப்பாட்டுக்களை இடைக் காலத்தார், இந்தளம் முதல் பஞ்சமம் ஈருகப் பதினேழு பண்களாக வகுத்துள்ளனர். இவற்றுள், தக்கேசிப் பண்ணில் 17 திருப்பதிகங்களும், நட்டராகப் பண்ணில் 14 திருப்பதிகங்களும், இந்தளத்தில் 12.திருப்பதிகங்களும், ஏனையவற்றுள் ஒன்றும், மூன்றும், நான்கும், ஐந்தும், ஏழும் ஒன்பதுமாக உள்ளன. திருமுறைகண்ட புராணம், இந்தளம், தக்கராகம், கட்டராகம், கொல்லி, பழம் பஞ்சுரம், தக்கேசி, காந்தாரம், காந்தார பஞ்சமம், கட்டபாடை, புறநீர்மை, காமரம், குறிஞ்சி, செந்துருத்தி, கெளசிகம்,பஞ்சமம் எனப்பதினைந்து பண்களைக் கூறுகின்றது. மிக்குக் காணப்படும் கொல்லிக் கெளவானமும் பியங்தைக் காந்தாரமும் முறையே கொல்லிப் பண்ணி லும் காந்தாரப் பண்ணிலும் அடக்கப்பட்டன போலும்.

இனி, நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்கள் நூறனுள், பொதுவாக உள்ள ஐந்து திருப்பதிகங்கள் ஒழிய எஞ்சிய தொண்ணுாற்றைந்தும் திருவெண்ணெய் நல்லூர் முதல் திருநொடித்தான் மலை ஈருக எண்பத்து நான்கு திருப்பதிகளைக் குறித்துப் பாடியுள்ளன.

திருப்பதிகப் பொருள்

இத்திருப்பதிகங்களால் இறைவன் இயல்பும், உயிர்களின் இயல்பும், உயிர் வாழ்க்கையின் இயல்பும், உயிர்கள் இறைவன் திருப்பெறுதலின் இயல்பும் இனிய தமிழ் நடையில் கூறப்படுகின்றன.


SIV–14.