பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சைவ இலக்கிய வரலாறு

அவருட் பலரைத் தமது சங்கத்திற் சேர்த்துக் கொண்டனர்; அவர்க்கு முன்னேய நான்கு புத்தர்களும் இருந்த இடங்களும் நடந்த சங்கங்களும் சீரழிந்து கிடக்கின்றன.”[1] என்றும் கூறுகின்றன.

மத்த விலாசம் என்பது மகேந்திரவன்மன் எழுதிய பிரகசன நாடகமென்பது அறிஞர் தெரிந்த செய்தி. அதன்கண் புத்த விகாரமொன்று குறிக்கப்படுகிறதன்றோ; அந்த விகாரம், இங்கே ஹியூன்சாங் குறித்துள்ள குறிப்புக்களிற் காணப்படும் புத்த விகாரமாக இருக்கலாம் என்பர். மத்த விலாச பிரகசனத்தில் வரும் தேவசோமன் என்னும் புத்தனால் இந்த விகாரம்[2] இராஜ விகாரம் எனப் படுகிறது. எனவே, இது பழைய வேந்தருள் ஒருவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தேற்றம். பழையோருள் சோழ வேந்தருள் ஒருவனான இளங்கிள்ளியென்பான் இப்புத்த சைத்தியத்தைச் செய்து வைத்தான்[3] என்று மணிமேகலை கூறுகிறது.

இனி, இந்த இராஜ விகாரம் சுற்றுப்புறங்களிலுள்ள சங்கங்கள் பலவற்றிற்கும் தலைமைச் சங்கமென்றும், அவ்ற்றின் வருவாய் இதற்குரியதென்றும், ஒருகால் தனதாசனென்னும் வணிகன் மனைவி புத்த சங்கத்தைச் சேர்ந்து பெரும்பொருளை வழங்கினாள் என்றும் தேவ சோமன் கூற்றில் வைத்து மத்த விலாசம் கூறுகிறது. மணிமேகலை காலத்தேயே இதற்குப் பெரும்பொருள் வழங்கப்பெற்றதை அந்நூலே கூறுகிறது. இதனால் மகேந்திரவன்மன் காலத்தில் காஞ்சிமாநகர்க்கண் இருந்த புத்த சைத்தியம் மிக்க செல்வத்தால் பெருமை பெற்றிருந்ததென்பது தெளிவாகிறது.

தென்னாட்டிற் பரவிய புத்த சமயம் மகாயானமென்றும், அதனைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நாகார்ச்சுனர்


  1. 1. Watters. VoI. II. p. 236.
  2. 2. மத்த. பிரக. பக் 12 “Yavadidanim Raja Vihara meva gaechami”.
  3. 3. “தொடுகழற்கிள்ளிதுணையிளங்கிள்ளி.பைம்பூம்போதிப் பகவற்கியற்றியசேதியம்” (மணி. 28: 172-175) என்று வரும்.