பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

சைவ இலக்கிய வரலாறு


இறைவன் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் முதலாகிய அகரவெழுத்தைப் போல், உலகிற்கு முதல்வகை[1] உள்ளான். உலகென்பது பாரும் விண்ணும் இடை நின்ற நீரும் தீயும் காற்றும் கலந்த மயக்கமாகும்[2] இறைவன் உலகத்தோடு ஒன்றாய் அத்ன் கூறுகளாகிய நிலமும் நீரும் நெருப்பு முதலிய எல்லாமாய் இருக்கின்றான் என்பதைப் படர்க்கையிலும்[3] முன்னிலையிலும்[4] வைத்து விரித்துக் கூறுகின்றார், உலகிடை வாழும் உயிர்களின் உடம்பின் கூறாகவும் இறைவன் ஒன்றுபட்டிருக்கின்றான் என்பதை, "ஊனாய் உயிரானாய் உடலானாய்[5] " என்பது முதலியவற்றால் குறிக்கின்றார். இவ்வுலகுயிர்கட்கு இடமாகிய அண்டமும் அதற்கு அப்பாலும் எல்லாம் இறைவனில் அடக்கம் , அவன் " அண்டமதாயவன்"[6] இவ்வண்டங்களில் காலமும் ஞாயிறுமாகி[7] உயிர்கட்குவேண்டும் பெண் ஆண் என நிலவும் உடம்புமாகி [8] இறைவன் விளங்குகின்றான்.

அண்டமும் பிண்டமுமாகிய எல்லாவற்றிலும் கலந்து ஒன்றாய் நிற்பதோடு அண்டம் கடந்து அப்பாலும் வேறுபட்டுத் தனித்து விளங்குவதும் இறைவற்கு இயல்பு.[9] அந்நிலையில் இறைவன் காண்டற்கரியன்[10] ; முதல் காண்பரியான்[11] ஒன்னா அறிவொண்ணா மூர்த்தி.[12]

இவ்வண்ணம், உலகுயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் நின்று விளங்கும் இறைவன், பண்ணிடைத் தமிழும் பழத்தினிற் சுவையும் கண்ணிடைமணியும்[13] போல் உடனாகவும் இருந்து, எழுத்துக்கு உயிர் போல் இயக்கமும், பயிர்க்குப் புயல்போல் ஆக்கமும்[14] நல்குகின்றான்.


  1. 1. சுங், தே. 5 : 7.
  2. 2. தொல். பொரு. மரபு. 89.
  3. 3. ௸ 2 : 10; 56: 8; 62: 6 ; 83 : 6.
  4. 4. ௸ 9 : 3.
  5. 5. சுங். தே. 1 : 7.
  6. 6 ௸ 20 : 9.
  7. 7. ௸. 19 : 9.
  8. 8. ௸.28:6
  9. 9 . ௸.12:2
  10. 10. ௸.18:2
  11. 11.௸.57:7
  12. 12. ௸.57:6
  13. 13. ௸. 29:6
  14. 14. ௸. 4.4