பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

217

நெல்லிக்கா, பழனம், பழையாறு, பாசூர், பாம்பணி, பாம்பரம், பிடவூர், புகலி, புரிசை நாட்டுப்புரிசை, பூங்கூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், மகோதை,[1] மருகல் நாட்டு மருகல், மிழலை நாட்டு மிழலை, மூலனூர், வலஞ்சுழி, விளத்தூர் நாட்டு விளத்தூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணி, வெண்ணி நாட்டுமிழலை, வெற்றியூர், வேலனூர், வேளாநாட்டு வேளூர் என்பனவாகும். இவற்றுட் பலவும் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் பாடப்பெற்றுள்ளனவாதலால், நம்பியாரூரரும் இவற்றின் . மேற்பதிகம் பாடியிருக்கலாம்; ஆயினும், அவை திருமுறை கண்டகாலத்தேயே மறைந்து போயினபோலும்.

இனி, நம்பியாரூரர் திருப்பதிகங்களில் அவர்காலத்தில் நிலவிய நாடுகள் சிலவற்றைக் குறிக்கின்றார். அவை, ஈழ நாடு, குறுக்கைநாடு, கொண்டல் நாடு, தென்னாடு, நறையூர் நாடு, நாங்கூர் நாடு, புரிசை நாடு, பொன்னூர் நாடு, மருகல் நாடு, மிழலை நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற்றம், வெண்ணிநாடு, வேளாநாடு என்பனவாகும். இவற்றுள், கொண்டல்நாடு ஒன்றொழிய ஏனையாவும் கல்வெட்டுக்களாலும் ஆங்காங்குகுறிக்கப்பட்டுள்ளன. கொண்டல் நாடு இருக்குமிடம் தெரிந்திலது; ஏனையவை தொண்டை நாட்டிலும் சோழநாட்டிலும் காணப்படும் உண்ணாடுகள். இதனால் நம்பியாரூரர் வாழ்வு பெரிதும் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலுமே நிலவிற்றென அவரது வரலாறு கூறுவது முற்றிலும் உண்மையாதல் இனிதுவிளங்குகிறது. மாதோட்டம், இராமேச்சுரம் ஆகிய திருப்பதிகளைக் கூறுமிடத்து “ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம்” என்ற திருப்பாட்டில், மேற்கொண்டு சோழநாட்டுத் துருத்தி முதலிய ஊர்களைக் குறிப்பார், “சோழ நாட்டுத்


  1. சங்க காலத்துச் சேரவேந்தருள் மாக்கோதை யென்பான் பெயரால் தோன்றி, நம்பியாரூரர் காலத்தே மகோதை யென மருவிவிட்ட இது வஞ்சிமா நகரின் ஒரு பகுதியென அறிக. இம் மகோதை, பிற்காலத்தே மகோதையார் பட்டினம் என மாறிப் பின்பு மகாதேவர் பட்டினமென வழங்கலாயிற்று—Logan's Malabar. p. 207.