பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

சைவ இலக்கிய வரலாறு

இவற்றோடு இயையும் வாழ்வு, “சுவையிலாப் பேதை வாழ்வு.”[1] முன்னே மணமென்று சொல்லி மகிழ்வுறும் தாய் தந்தையரும் பிறரும், பின்னே பிணம் எனச் சுட்டெரிப்பர். இதனை யுணராதார்,

“தாழ்வெனும் தன்மை விட்டுத்
    தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்

    மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்” [2]

என்று தெருட்டுகின்றார்.

இச் சுவையிலாப் பேதை வாழ்வைச் சுவையுடைத்து எனக் கருதுவோர் பலரும், “பாவமே புரிந்து பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு ஆவ என்று உழந்து அயர்ந்து[3] வீழ்வர்.” அவர்க்கு உயிர் வாழ்க்கை யொன்றே கருத்து அதனால் அவர்கள் அதையே நினைந்து உடல் தளர்ந்து மாநிதி இயற்றி “என்றும் வாழலாம்”.[4] எனப் பேசுவர். வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து வீற்றிருந்த இவ்வுடம்பு தேய்ந்து இறந்து வெந்துயர் உழக்கும்;[5] வேறு சிலர் சடை முடித்துத் தவம் முயன்று அவமாயின. பேசுவர்; அதனால் பிறவித்துயர் நீங்குவது அரிது;[6] எத்திறத்தோர்க்கும், சுற்றமும் துணையும் பிறரும் கண்டு கண்ணீர் சொரிந்து அழ, உயிர் உடம்பின் நீங்கிப் போவது நிச்சயம்.[7] வேறு சிலர், தேரர் சமணர் முதலியோருடைய வேற்றுச் சமயம் கூறும் தவம் மேற்கொண்டு அவஞ் செய்வர்; அவர், தமது தவத்தின் அவத்தன்மை யுணர்ந்து நீங்கல் வேண்டும்; தளிகளையும் சாலைகளையும் நிறுவுவது. தவமென முயல்வர்; அவர்கட்கு அவை தவமாவது, தம்மை உணர்ந்து தம்மை அடிமையாகவுடைய இறைவனை உணர்ந்து செய்யுங் காலையேயாம்.[8] சுருங்கச் சொல்லுமிடத்து, உறுதி நாடுவோர், இறைவன் திருக்கோயில்களை


  1. சுந். தே. 8 : 4.
  2. சுந் தே. 8 : 7.
  3. ௸ 64 : 4.
  4. ௸ 64 : 5.
  5. ௸ 64 : 6.
  6. ௸ 64 : 7.
  7. ௸ 64 : 8.
  8. ௸ 78 : 6.